Sunday, December 2, 2007

நெஞ்சத்திரை - கண்ணுக்குத் தெரியும் மாயையுமல்ல, கற்பனை கலந்த நிஜமுமல்ல..

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னாடி என் ம‌ன‌தை பாதித்த‌ ஒரு அவல நிகழ்ச்சியை கதை வடிவில் செதுக்க முயற்சித்துள்ளேன்..


சொர்க்கமா.. நரகமா..

வாசற்படி - 1

என்னமோ, எப்பவோ, எப்படியோ தெரியலை..
விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து என் முருகேசு மாமாவை நான் மரிக்கொழுந்து மாமான்னு தான் கூப்பிடுவேன்..
எல்லாரும் நான் நையாண்டிக்குத்தேன் அப்படி என் மாமாவை கூப்பிடுறேன்னு நினைச்சாங்க..
ஆனா எனக்குத்தேன் தெரியும் ஏன் அப்படி கூப்பிடுறேன்னு..
பார்க்க பூமாதிரி தெரியாட்டாலும், மரிக்கொழுந்து பூ தான்..பச்சை உடம்பு.. அது வாசம் எந்த பூக்கும் வாராது.... வாட, வாட மெருகேரும் அது வாசம்..
அது மாதிரி தான் என் மாமனும்.. எங்க சாதிசனமும், ஊருசனமும் மெய்க்க பேசும் படிச்ச கிராமத்தான் .. ஆனாலும் இந்த பட்டிக்காட்டு பொட்டச்சியை நேசிக்கும் பூ மனசு..

அறைப்பாவாடை சட்டையில ஜைன்,ஜைன் கைதட்டும் பொம்மைக்காரன் கையில கட்டிவிட்ட ஜவ்வுமிட்டாய் வாட்சை நான் ஆசையா பார்த்து ரசிக்கையில, வெடுக்குன்னு என் கைய இழுத்து என் வாட்ச்சுமிட்டாய சப்பினவனை, அவன் நெஞ்சுள கைய வச்சு ச‌டுக்குன்னு அவன தள்ளி, என் கைய அவன்கிட்டேருந்து நான் புடுங்கி அழுகும் போது, பதறி ஓடியாந்த என் அம்மா நீ கட்டிக்கப்போற மாமன் மவன் தானடி.. ஏன் இப்படி கரையிறன்னு என்னை முறைசொல்லி வைய்யும்போது, அப்பத்தேன் .. வகுடெடுத்து சீவி, டவுசர் சட்டை போட்டு நிக்கும் என் மரிக்கொழுந்து மாமனை நான் பார்த்தேன்..

அம்மா சொன்ன முறையும் புரியாம, நான் கரைஞ்ச கரை எந்த மூலைக்கு போச்சுன்னும் தெரியாம வெள்ளையா நான் பார்க்க, இந்த உரிமையன் தான்டி உனக்கேத்த முறைக்காரன்னு பத்து வயசிலயே கண்ணால ஜாடை சொல்லி மரிக்கொழுந்து மாமா சிரிக்க, அது சப்பி சாப்பிட்ட என் மிட்டாயி வாச்சு டிக்,டிக்குன்னு அது கண்ணுல ஓடுறத பார்த்து நானும் கிளுக்குன்னு சிரிச்சுபுட்டேன்..

அந்நேயிலேருந்து என் மாமாவோட விளையாடும்போதுஞ்ச‌ரி, ம‌த்த‌வ‌க என் மாமாவ‌ப் ப‌த்தி பேசும்போதுஞ்ச‌ரி என் முறையையும், உரிமையையும் நான் விட்டுக்கொடுத்த‌துமில்ல‌, அதை யாராச்சும் சீண்டும்போது தொட்டாச்சினுங்கியா என் க‌ண்ணால அதுக்காக‌ சினுங்க‌ ம‌ற‌ந்த‌துமில்ல‌..
என் சிரிப்பு, சினுங்க‌ல்,அழுகை எல்லாத்துல‌யும் என் மாமாவை நிறைச்சு வ‌ச்சுருந்தேன்.. என் மாமா மேல‌ அம்புட்டுகொல்ல‌ ஆசை என‌க்கு..

ஆனா, முலை முட்டி, முழுப்பாவாடை ச‌ட்டை போட்டுகிட்டு, ஆம்ப‌ளை ப‌சங்க‌ளோட விளையாட‌க் கூடாதுன்னு நிர்ப‌ந்த‌ம் வ‌ந்த‌ வ‌ய‌சிலதேன் என் மாமனை ச‌ரியா பார்க்காம‌, என் உரிமையையும், ஆசைய‌யும், பாச‌த்தையும் ம‌றைச்சு காட்டுற‌ மேனாமினுக்கியானேன்..
ஆனாலும் என் மாமா என்னை எங்க‌ பார்த்தாலும் க‌ண்ஜாடை சிரிப்பால‌ நான் தான்டி உன‌க்கு, நீ தான்டி என் சிங்காரின்னு சொல்ல ம‌ற‌ந்த‌துமில்ல..ம‌றைச்ச‌துமில்ல‌..

நான் ப‌த்தாவ‌து ப‌டிக்கையில‌, வீட்டுக்கு அடுப்பெரிக்க சுள்ளியும், ச‌ருகும் பொருக்க‌, சினேகிதிக‌ளோட ஆர‌ஸ்ப‌தி காட்டுக்கு போனேன்..
அங்கே என் ம‌ரிக்கொழுந்து கையில பன்னெண்டாம் வகுப்பு இய‌ற்பிய‌ல் புத்த‌கத்தோட‌, முழுக்காலு டிர‌வுச‌ரோட, காத்துல கோடு போட்டு, எங்க ஊரு ம‌ந்தையில‌ நிக்கிற அம்பேத்காராட்ட‌ம் ப‌டிச்சிகிட்டு இருந்தாங்க‌..
சும்மா இல்லாம என் சினேகிதி ஒருத்தி "அடியே பொம்மி, அப்ப‌வே எங்க‌ அம்மா சொன்னுச்சு, பொழுது சாய‌ப்போற‌ நேர‌ம் பாத்து காட்டுக்கு போறிகளேடி காத்து க‌ருப்பு ஏதும் ப‌ய‌மூத்த போகுதுன்னு, இப்ப‌ பாரு ஒரு க‌ருப்பு புத்த‌க‌த்தோட‌ நிக்குதுன்னு" என் மாம‌ன‌ வ‌ம்புக்கு இழுத்தா...

என்னதான் ப‌டிப்பாளி புள்ளனாலும், என் மாமா ஒன்னும் வாயில்லா பூச்சியில்லையே.. "ம்ம் என்ன‌ கூட‌தான் ப‌ச‌ங்க‌ காட்டுக்கு போகாத‌டா, வ‌ய‌சு ப‌ச‌ங்க‌ளை மோகினிங்க விடாதுன்னு சொன்னானுங்க‌, ஆனா இப்ப‌டி என் மோகினியோட‌, ப‌ல‌ பிடாரிக‌ளும், காட்டேரிக‌ளும் என்னைத்தேடி வ‌ரும்னு ப‌ச‌ங்க‌ளும் சொல்லலை, நானும் எதிர் பார்க்க‌லையேன்னு" விறைப்பா சொன்னாங்க‌..
வாய‌க்குடுத்தா என் மாம‌ன்கிட்டேருந்து மீள‌ முடியாதுன்னு "அய்யா, புத்தக‌ சாமியாரே நீங்க உங்க வேலையை பாருங்க, நாங்க‌ எங்க‌ வேலையை பார்க்குறோம்.. அம்மாடி பொம்மி, இங்க‌ இருக்குற‌ சுள்ளிய நீ பொருக்கு, நாங்க கொஞ்சம் உள்ள‌ போயி பொருக்குறோம்னு" என‌க்கு... இல்ல, இல்ல எங்க‌ளுக்கு சாத‌கமா, குத்தலா சொல்லிட்டு போயிட்டா...

ஒன்னுந்தெரியாத‌வ‌ளாட்ட‌ம் த‌லையாட்டிவ‌ச்சேன் நானும்..

முறைப்பை‌ய‌ன் அக்க‌த்துல‌ நிக்க‌, வ‌ய‌சு நாண‌த்துல சிக்க‌, எதையோ பொருக்காம இதை பொருக்குறேனேன்னு கை நடு, ந‌டுங்க சுள்ளியை பொருக்குனேன்..
செவ்வந்தியையும்,ம‌ரிக்கொழுந்தையும் க‌ல‌ந்து நான் த‌லையில க‌ட்டி வ‌ச்சிருந்த க‌த‌ம்ப‌த்தில பட்டாம்பூச்சி ஒன்னு ப‌த‌ம் பார்த்து ஒக்காந்துருக்க... அதை என‌க்கு புடிச்சுத்த‌ர என் மாமா எனை நெருங்கி என் தலையில கைய வைக்க , ப‌த‌றி நான் திரும்பி, மூச்சு சர‌ச‌ர‌க்க, உட‌ம்பு ப‌ட‌ப‌ட‌க்க, கொஞ்சம் விலக நினைக்க‌யில‌, ப‌ய‌ந்துட்டேனோன்னு நினைச்சு ஆத‌ர‌வா, உரிமையா என் கை பிடிச்சாங்க என் மரிக்கொழுந்து மச்சான்..
உரிய‌வ‌ன் கைபட்ட‌துல‌ ம‌ன‌சு ம‌ட்டும் பூக்காம‌, உட‌ம்பும் பூக்க ஆர‌ம்பிச்சுருச்சு..
பூ, பூக்குற‌ வ‌லி பொருக்க‌ முடியாம, என் மாம‌ன் கையை இருக புடிச்சு அம்மான்னு நான் கத்த... விவரம் ஏதும் விளங்காம என் மாமன் கண் நடுங்க... ஓடி வந்த சினேகிதிகள் என்னடியாச்சுன்னு கேட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க..
விஷயம் புரியாம எங்க பின்னாடியே என் வீடு வரையிலயும் வந்த மாமனுக்கு பின்புதான் புரிஞ்ச‌து நான் பூப்படைஞ்ச‌து…

(ப‌டிக‌ள் உண்டு முடிவைத் தொட‌..)
--------------- ***--------------

வாசற்படி - 2

Saturday, December 1, 2007

வாசற்படி - 2

பச்சை ஓலைகுச்சி வீட்டுக்குள்ள வெளக்கமாரு துணையிருக்க, ஒலக்கை அணைபோட, திரைச்சேலை தடுப்போட ஒண்டியா உட்காந்துருந்தேன் நானு.. என் மாமன்ங்கிற ஒத்தையடி பாதையில மரிக்கொழுந்து வாசம் வயப்பட்டு மயங்கிக் கிடந்தது என் மனசு.. திடுக்குன்னு ஒரு சலசலப்பு..


விடுக்குன்னு என்னை என் சுய புத்திக்கு கொண்டு வந்தது அந்த சத்தம்.. "அத்தே..அத்தே"ன்னு என் அம்மாவை கூப்பிட்டுகிட்டே எங்க வூட்டுக்குள்ள நுழைஞ்ச என் மாமனோட சத்தந்தேன் அது.. சத்தம் கேட்டு, ஓலைக்குச்சி இடுக்குள காமிரா பார்வையா என் மாமன பார்த்து ரசிக்க நான் முண்டிகிட்டு கிடந்தா...அடுப்பாங்கரையிலதானே அத்தை இருக்காக, நம்ப ஆசைக்கிளியை திரைச்சீலை வழியாவாவது பார்ப்போம்னு நினைக்காம, பொட்டபுள்ளையாட்டம் வெட்கப்பட்டுகிட்டு, என் ஓலைகுச்சியக்கூட பார்க்க சங்கோஜப்பட்டுக்கிட்டு என் அம்மாகிட்ட உலரிகிட்டே பதில் சொல்லிகிட்டு இருந்தாங்க..


என் அத்தை, சமைஞ்சிருக்க எனக்குன்னு உளுந்தங்களியும், கோழிக்கரி குழம்பும் குடுத்துவிட்டுருக்காங்க.. அதை சொல்றதுக்கு ஏதோ வாத்தியாருகிட்ட திக்கித் திணறி பேசுற மாதிரி எத்தனை திக்கலு, எத்தனை விக்கலு.. அய்யோ!! என் மக்கு மாமான்னு இருந்தது எனக்கு..

ஆனாலும் பாருங்க இந்த சாமிக்குத்தான் என்மேல எம்புட்டு கொல்ல பிரிய‌ம்.. இல்லைனா.. இப்ப‌டி உரிய‌வ‌ன் கைப‌ட்டுத்தேன் நான் உக்காரணும்னு என் த‌லையில‌ எழுதி வ‌ச்சுருப்பாரா சொல்லுங்க..

என்னதேன் ஊருகட்டுப்பாடு, உறவு கட்டுப்பாடுன்னு இருந்தாலும், சின்ன வ‌ய‌சில எங்க‌ளுக்குள்ள போட‌ப்ப‌ட்ட ப‌திய‌ம் எங்க உசிருல‌யும், ம‌ன‌சிலயும், க‌ண்ஜாடை, வாய்ஜாடையா நல்லாவே வேருவிட ஆர‌ம்பிச்சுருச்சு..
என் சினேகிதிங்க யாராவ‌து.. ஏன் என் சினேகிதிங்க‌ன்னு சொல்ல‌ணும்... என்னை நானே நீ உன் ம‌ரிக்கொழுந்து மாம‌னை காத‌லிக்கிறியான்னு கேட்டா, இல்லைன்னுதேன் சொல்லுவேன்.. எனக்குள்ள இருக்குற என் மாம‌னோட நினைப்பும், என் மாமா என்மேல வ‌ச்சிருக்கிற நேசமும் காத‌ல்ங்கிற ஒரு சின்ன வார்த்தையில அட‌ங்காதுங்கிற‌து என் ஆத‌ங்க‌ம்... க‌தையில வர்ற ஆண்டாளு ஆண்டவன் க‌ண்ணனை எம்புட்டு நேசிச்சாகன்னும் என‌க்கு சொல்ல‌த்தெரிய‌லை.. நான் என் மாம‌னை என் உசிர‌க்காட்டிலும் பெருசா நேசிச்சேன்னு ம‌த்த‌வ‌க‌ளுக்கு விள‌ங்குறாப்புல‌யும் என‌க்கு சொல்ல‌த்தெரிய‌லை..

ம‌த்த காத‌ல் ஜோடிக‌ளாட்ட‌ம் தொட்டுக்கிற‌து, ப‌ட்டுக்கிற‌துன்னு எங்க‌ளுக்குள்ள இல்லாட்டியும் எங்க ஊருக்காரவக ம‌த்தியில‌யும், உற‌வுக்காரவக ம‌த்தியில‌யும் எங்க மாமா என்னைத்தேன் க‌ட்டிக்கும்னு எல்லாத்துக்கும் ஒரு அசைக்க முடியாத ந‌ம்பிக்கை இருந்துச்சு...அதுமாதிரியே என்னதான் தொட்டு உறவாடாட்டாலும், மாமாவும் நானும் ஒரே ஊரில இருந்த‌தால எனக்கும் எந்த ஒரு ஏக்க உண‌ர்வும் ஏற்ப‌ட‌லை... மாமாவை பார்க்குற‌தே போதும்.. எப்ப‌டியும் இன்னும் கொஞ்ச நாளில மாமாவோட‌தானே இருக்க‌ப்போறேன், அப்ப‌ற‌ம் என்ன க‌வ‌லைன்னு இருந்த‌து..

ஆனா காலேஜ் ப‌டிப்புக்குன்னு மாமாவை ப‌ட்ட‌ண‌த்தில இருக்குற காலேஜில சேர்த்து ஹாஸ்ட‌லில த‌ங்கி ப‌டிக்க வைக்க‌ப்போறேன்னு என் பெரிய மாமா (என் ம‌ரிக்கொழுந்து மாமாவோட‌ அப்பா) எங்க அப்பாருகிட்ட சொல்லும்போதுதான் என‌க்குள்ள ஏதோ குடைய ஆர‌ம்பிச்சுச்சு. என‌க்குள்ள என் மாம‌னை பார்க்காமா இருக்க முடியுமாங்கிற ப‌ய‌மும், ஏக்க‌மும் வந்துருச்சு...

மேற்ப‌டிப்பு ப‌டிச்சா, ப‌ட்டிக்காட்ட‌யும், ப‌ட்டிக்காட்டு ம‌னுசால‌யும் திரும்பிக் கூட பார்க்கமாட்டாக‌ன்னு உள்குத்த‌லா உற‌வுக்கார‌வ‌ங்களும்... ஆம்ப‌ளைக‌ளும், பொம்ப‌ளைக‌ளும் ஒன்னா சேர்ந்து ப‌டிக்கிற காலேஜில ப‌டிச்சா ப‌ட்ட‌ண‌த்து பொட்ட‌ப்புள்ளைக கிராம‌த்து ப‌சங்க‌ள ஒரேய‌டியா வ‌லைச்சு போட்டுறுவாக‌ன்னு என் சிநேகிதிக‌ளும் ஏதோ பிணாத்திகிட்டு கிடந்தாக... என் புத்தி அதுக்கெல்லாம் செவி சாய்க்காம என் மாம‌னையே சுத்தி வ‌ந்து பிரிவுங்கிற வேட்கையில புழுங்க ஆர‌ம்பிச்சுருச்சு..

எதிர்கால‌த்துக்காக நிக‌ழ்கால‌த்தை விட்டுக்கொடுத்துதானே ஆக‌ணும்ங்கிற கட்டாய முடிவுல இர‌ண்டுபேருமே பிரிவை ஏத்துகிட்டு நாட்க‌ளை க‌ட‌த்தினோம்.

ஆனா விதி யாரைத்தேன் விட்டுத்தொலைக்குது... இந்த பிரிவு எங்க‌ளை வெகுசீக்கிர‌மா சேர்த்துவைக்க‌ப்போற அறிகுறின்னு ந‌ம்புன எங்க ந‌ம்பிக்கைக்கு ச‌குண‌த்த‌டையா வ‌ந்த‌து, என் அத்தையோட ஒன்னுவிட்ட‌த்த‌ம்பி வீட்டு வ‌ருகை...

ப‌ட்ட‌ணத்தில ப‌ஸ் க‌ண்ட‌க்குட்ட‌ரா வேலைப் பார்த்த‌வ‌ரு, ஒன்னா சாதி ச‌ன‌த்தோட பொழைச்சு வாழ‌லாமுன்னு பொஞ்சாதி சொன்ன யோச‌னையின் பேருல எங்க சித‌ம்ப‌ர‌ப்ப‌ட்டிக்கு ப‌க்க‌த்துல இருக்குற உசில‌ம்ப‌ட்டியில வ‌ந்து டேராபோட்டுட்டாக..

அந்த சின்னம்மாவுக்கு கொஞ்ச‌ம் வாயி அதிக‌மாம். சாதிச‌ன‌த்தோட எப்ப‌வும் ஒண்டாதாம்.. ப‌ட்ட‌ண‌த்துல இருந்த‌துல ஏதோ தக‌ராறும், சிக்க‌லும் ஆகிப்போன‌தாலதான் இப்ப‌டி பட்டிக்காட்டுல டேரான்னு எங்க சொந்த‌க்கார‌வுக எல்லாம் சொன்னாக..
என் மாமா இர‌ண்டாவ‌து வ‌ருச‌ம் காலேஜ் ப‌டிக்கும்போதுதான் எங்க இர‌ண்டு வீட்டு உற‌வுல‌யும் ப‌ல அடிக‌ள் விழ ஆர‌ம்பிச்சுச்சு..ம்ம்.. அடி மேல அடி விழுந்தா அம்மியே ந‌க‌ரும்போது ம‌னுசாலுக எம்மாத்திர‌ம்..

என் மாமா வீட்டில இருந்த ப‌சுமாடு ஒன்னு மாச‌மா இருந்து செத்துப்போச்சு.. வீட்டில இருந்த நிற‌மாச ப‌சுமாடு செத்துப்போன‌து குடும்ப‌த்துக்கு ஆகாதுன்னும், அது குடும்ப‌த்து ஆம்ப‌ளையோட பிற‌ந்த வீட்டு கோளாறுன்னும்.. அதுவும் நான் ச‌மைஞ்ச நேர‌ம் ச‌ரியில்ல‌ன்னும் புற‌லியை கிள‌ப்பிவிட்டுட்டாக அந்த புதுசா முளைச்ச சின்ன‌ம்மா.. அவுக‌ளுக்கும் என் வ‌ய‌சில ஒரு பொண்ணு இருக்கு...

நான் வ‌ய‌சுக்கு வ‌ந்துருந்த‌ப்ப எங்க அத்தை வீட்டில ந‌டந்த சின்ன சின்ன க‌ஷ்ட‌த்தையெல்லாம் ஊதி பெருசாக்குனாங்க அந்த சின்ன‌ம்மா... வீட்டுக்குள்ள ந‌ல்ல ம‌ன‌சும், ந‌ல்ல பார்வையும் இல்லாத ம‌னுசாலுக நுழைஞ்சா இப்ப‌டித்தேன் ந‌ட‌க்கும்னு புரியாம..அந்த சின்னம்மா பேச்ச கேட்டுகிட்டு அதிலேருந்து எங்க அத்தை எங்க அம்மாவோட விட்டாகுறை, தொட்டாகுறைன்னு எதுக்கெடுத்தாலும் சின்ன சின்ன‌தா ச‌ண்டை போட்டாக..

இது எல்லாத்துக்கும் மேல சூடு ஏத்துறாப்புல ஒன்னு ந‌ட‌ந்த‌து பாருங்க‌.... க‌ட‌வுளே, க‌ட‌வுளே!!! எங்க அம்மாவுக்கு ம‌ஞ்ச‌க்காமாலை வ‌ந்த‌தால, தெம்மாவூரு சாமியாருகிட்ட ம‌ந்திருச்சு க‌யிறு க‌ட்டிகிட்டு, ப‌த்திய‌ச்சோறும் அவ‌ருகொடுக்குற ப‌ச்சிலையும் சாப்பிட்டா குண‌மா போகும்னு ஊருக்கார‌வ‌க சொன்ன‌த ந‌ம்பி எங்க அப்பா, அம்மாவ கூட்டிகிட்டு தெம்மாவூரு போயிட்டு வந்தாரு..

இது ந‌ட‌ந்து ஒரு இர‌ண்டு நாளில‌, மாடுக‌ளை ஓட்டியார வ‌ய‌லுக்கு போன எங்க அத்தை வ‌ழுக்கி விட்டு கீழே விழுந்து, காலில சுளுக்காகி ப‌டுத்துட்டாங்க.. "என்னைப் ப‌த்தி பேசுன‌து பொறுக்காம‌, ந‌ட‌ந்த ச‌ண்டைகளையெல்லாம் கார‌ணமா வ‌ச்சு, என் அம்மா நோவுல படுத்ததுக்கு எங்க அத்தைதேன் காரணம்னு வஞ்சம் வச்சு, எங்க அப்பாரும் அம்மாவும் சாமியாருகிட்ட போயி ம‌ந்திருச்சு எங்க அத்தை வீட்டு மேல சூனிய‌ம் வ‌ச்சு, ம‌ந்திருச்ச த‌க‌டை எங்க அத்தை வீட்டு வ‌ய‌லில புத‌ச்சுட்டாக... அதுதேன் அத்தையோட ப‌டுக்கைக்கு கார‌ண‌ம்"னு வ‌தந்தியை வித‌ச்சுட்டாக புதுசா வ‌ந்த ம‌க‌ராசி...
அதுக்கு சேத்து சுதி பாடுற‌துக்குன்னு வ‌ய‌லுக்குப் போன என் பெரிய மாமாவை பாம்பு க‌டிக்க போயிருச்சு.. ந‌ல்ல வேளை பாம்பு க‌டிக்க‌லை, அதுக்காங்குள்ளியும் அடிச்சு கொன்னுபுட்டாக.. க‌டிக்க வ‌ந்த‌து ஓலை பாம்பானாலும் அது வந்த‌துக்கு கார‌ண‌ம் வ‌ய‌லில புத‌ஞ்சிருக்குற த‌க‌டுன்னு கார‌ண‌ம்காட்டி ச‌ண்டை போட்டாக எங்க அத்தை..


"என்ன‌தேன் இன்னைக்கு, நேத்து வருத்தம்னாலும், சொந்த உறவுல சூனியம் வைக்கிற வ‌ஞ்ச‌க‌க்காரி நான் இல்லை"ன்னு எங்க அம்மா வாயில‌யும், மாருல‌யும் அடிச்சுகிட்டு க‌த்த.. ச‌ண்டை முத்தி ம‌ண்ணை வாரி இரைச்சுக்குற அள‌வுக்கு போயிடுச்சு... இது வ‌ரைக்கும் ந‌டந்த ச‌ண்டைக ஒன்னுல கூட இரண்டு வீட்டு ஆம்ப‌ளைக‌ளும் க‌ல‌ந்துக்க‌லை, அதையும் பெரிசு ப‌டுத்திக்க‌லை.. அவுக பாட்டுக்கு இருந்தாக.. ஆனா இந்த பெரிய ச‌ண்டை எல்லாத்தையும் ரொம்ப‌வே உலுக்கிடுச்சு.. சண்டை‌யில நேர‌டியா எங்க அத்தைக்குத் துணையா அந்த சின்ன‌ம்மா க‌லந்துகிட்டு வ‌ஞ்ச‌கமா பல வார்த்தைக‌ளை கூற, அதைகேட்டு "உன் பொண்ணை என் த‌ம்பி வீட்டுல வாழ வைக்க‌த்தான‌டி இப்ப‌டி ச‌குனியாட்ட‌ம் ஆடுற கூனின்னு" எங்க அம்மா பொட்டுன்னு உண்மையை உடைக்க, அதை கேட்டு அந்த சின்ன‌ம்மா சாமியாட, க‌டைசியில ச‌ண்டை வெட்டுக்காயா முடிஞ்சுருச்சு..

ஆமாங்க ... இர‌ண்டு குடும்ப‌முமே பெத்த பிள்ளைக‌ளை, அவுக‌ளுக்குள்ள இருக்குற‌ ஆசையை, உற‌வை, ப‌ழைய குடும்ப உற‌வை எதையுமே நினைச்சு பார்க்காம, ரெண்டு குடும்ப‌த்து பெரிய ஆம்ப‌ளைக‌ளையும் ச‌க்க‌ள‌த்தி இழுப்பா வீர‌மாகாளி கோயிலுக்கு இழுத்துட்டு போயி, ரெண்டு வீட்டு உற‌வுக்கும் செத்தா இல்லை, வாழந்தா இல்லைன்னு முறைப்பாடு போட்டுட்டு வ‌ந்துட்டாங்க.....

(ப‌டிக‌ள் உண்டு முடிவைத் தொட‌..)

--------------***-------------

வாசற்படி - 3

Saturday, November 24, 2007

வாசற்படி - 3

யாரு க‌ண்ணுப‌ட்டுச்சோ?, எங்க‌ குடும்ப உற‌வு இப்ப‌டி அத்துகிட்டு நிக்குது... "இந்த‌ வ‌ருஷ‌ம் ஏந்தான் பொறந்துச்சோ", ம்..ம்..பெண் மனசாச்சா.."எல்லாத்துக்கும் காரணம் நாந்தானோ"ன்னு என்னை நானே நொந்துகிட்டு கிடந்தேன்...

கல‌ங்கி நிக்கும் என் கோல‌த்தை பார்த்து, "வாரந்தவறாம வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்ல எலுமிச்சை விளக்கு போடுடி, உன் நல்ல மனசுக்கு ஆத்தா எல்லாத்தையும் சரியாக்கிடுவா"ன்னு என் தோழி பாப்பாத்திதேன் என்னை கூட்டிட்டு போனா.. ஆயிர‌ம் க‌வ‌லையையும், க‌ல‌க்க‌த்தையும் ம‌ன‌சுக்குள்ள‌ க‌ச‌க்கிபோட்டு வ‌ச்சுருந்தாலும், அம்ம‌ன் முக‌த்தை பார்த்த‌வுட‌னே எல்லாம் விர‌ய‌ப்ப‌ட்டு என் க‌ண்ணை குள‌மாக்கிடுச்சுங்க‌.. ம‌ன‌சுக்குள்ள எங்கோ ஒரு மூலையில ஏதோ ஒரு வ‌கையான‌ நிம்ம‌தி துளிர்விட‌ ஆர‌ம்பிச்சுது..

இப்படியே நாளுக நகர, ஒரு வெள்ளிக்கிழ‌மை என் பிற‌ந்த நாளு வந்த‌து, இந்த நாளிலேருந்தாவ‌து இனி என் வாழ்க்கையில‌ நல்ல‌து ந‌ட‌க்க‌ட்டும்னு கோயிலுக்குப் போறேன்..அங்க ப‌ச்சை புட‌வையில அம்ம‌ன் த‌ரிச‌ன‌ம் என் அத்தை உருவ‌த்தில‌.!..
என‌க்குள்ள அம்புட்டு ச‌ந்தோஷ‌ம்..

என்னைப் பார்த்து முக‌த்தை ஒரு ப‌க்க‌மா திருப்பிக்கிட்டாலும், நானே வ‌ழிவிக்க‌ போயி, "என‌க்கு இன்னைக்கு பிறந்த‌ நாளுங்க‌ அத்தை, என்னை ஆசிர்வாத‌ம் ப‌ண்ணுங்க"ன்னு சொன்னேன்..
எங்க ஊருக்கு வ‌ந்த‌ நாளிலேருந்து என் பிறந்தநாளு, திருவிழா, தீபாவ‌ளி, பொங்க‌லு எல்லா விசேஷ‌த்துக்கும் க‌ண்ணாடி வ‌ளைய‌ல் வாங்கி என் கைக‌ளில‌ மாட்டிவிட்டு "என்னாடி என் ச‌க்காள‌த்தி, எப்படி எனக்கு ம‌ரும‌க‌ளா வ‌ர‌ப்போற"ன்னு என் கொமுட்டுள (கன்னத்துக் குழி) குத்துவாங்க என் அத்தை.. "இப்ப‌டி எல்லா பாச‌த்தையும், பந்த‌த்தையும் ப‌ழைய‌ நினைப்புன்னு சொல்லுறாப்புல‌ அழுக்காக்கிட்டோமே"ன்னு எங்க‌ அத்தை வ‌ருத்தைப்ப‌ட்டு விக்கிச்சு நின்ன‌ அந்த‌ நொடி இன்னும் என் க‌ண்ணை விட்டு ம‌றைய‌ல‌..
இருந்தும் த‌ன்னைத் தானே ஏமாத்திகிட்டு, வறட்டு வம்புதேன் கௌரவம்னு "நல்லாயிரு"ன்னு ஒட்டி, ஒட்டாம‌ ஒத்த‌ வார்த்தைய‌ சொல்லி கையில வச்சிருந்த குங்குமத்தை என் நெத்தியில‌ வைச்சுட்டு போனாங்க‌..

என‌க்குள்ள ஒரு ம‌த்தாப்பூ ச‌ந்தோஷம் அத்தை எனக்கு பொட்டு வச்சுவிட்டதுல‌.
ஆனா அந்த‌ ம‌த்தாப்பூ முழுசா ஒரு நாளைக்குக்கூட‌ நிலைக்க‌லை.

அடுத்த‌ நாளே அத்தைக்கு ஏதோ உட‌ம்புக்கு சுக‌மில்லாம‌ போயிடுச்சு.. ஆகாத‌ ம‌ரும‌க அழுதாலும் த‌ப்பு, சிரிச்சாலும் த‌ப்புங்கிற‌ பொழ‌ப்பா போயிடுச்சு என் நிலைமை.

என்னன்னு சொல்லுறது.?..

வ‌ட‌க்கித்தெரு செவ‌த்த‌ கிழ‌வி செத்த‌ இழ‌வுக்குப் போன‌ இட‌த்தில‌ "முறைப்பாடு உள்ள இட‌த்தில‌ உள் வ‌ஞ்ச‌க‌மா உற‌வுபாடி, சாமிக்குத்த‌மாக்கி, நல்லாயிருந்த‌வ‌ள‌ ப‌டுக்க‌ப்போட்ட பாவிக‌ல்லாம் இருக்க, வாழ வ‌ழியெத்து நீயா போக‌ணும்னு" ஒப்பாரி ப‌டிச்சு என் அம்மாவை வ‌ம்புக்கு இழுத்துருக்காக‌ அந்த‌ ட‌வுனு சின்ன‌ம்மா..
எங்க‌ அம்மாவுக்கு உட‌னே ரோச‌ம் பொங்க‌, "இழ‌வுக்குப் போன இட‌த்துல‌ கூட‌ உன் இழ‌வு என்னை ப‌டுத்துதேடி.., அவ‌ள் ஆசிர்வாத‌ம் வ‌ந்துதேன் உன்னை வாழ‌ வைக்க‌ப்போகுதா"ன்னு அவுக‌ ஒப்பாரியை வெள‌க்கமாத்தாலே என் முதுகில ப‌டிச்சுட்டாங்க...

என‌க்குள்ள இருக்குற ந‌ம்பிக்கையையெல்லாம் ஆண்ட‌வ‌ன் இப்ப‌டி சித‌ற வ‌ச்சு வேடிக்கை பார்ப்பான்னு நான் க‌ன‌வு கூட காண‌லையேன்னு மூலையில‌ முட‌ங்கி உக்காந்துருந்தேன்... ஏன்னே தெரிய‌லை .. எங்க‌ ஊரு அய்யனாரு முகமும், செம்மியும் என‌க்குள்ள ம‌றைஞ்சு, ம‌றைஞ்சு வ‌ந்துபோச்சு.. கொல்லையில இருந்த வாழையிலேருந்து என் ம‌ன‌சு போல‌ ச‌ருகாகிட்டுருந்த ஒரு இலைய‌ பிச்சு அதுல வெள்ள‌ச் சோறையும், புளித்துவைய‌லையும் மடிச்சு எடுத்துகிட்டு அய்ய‌னார பார்க்க போனேன்..

சின்ன‌ வ‌ய‌சில‌ ஒவ்வொரு நாளும் ப‌ள்ளிக்கூட‌த்துக்குப் போறப்ப‌ என் ம‌ரிக்கொழுந்து மாம‌னோட வந்து இவ‌ருக்குத்தேன் வ‌ந்து கும்புடு போட்டுட்டு போவேன்.. கோயிலிலேருந்து ரெ‌ண்டாவதா இருக்குற ஆல‌ம‌ர‌த்துக்குக் கீழ இந்த‌ ம‌ண்ணை ம‌டியா நினைச்சு குத்த‌ வ‌ச்சு உக்காந்துருக்கும் இந்த செம்ம‌ண் குதிரைதான் எங்க‌ குதிரை. என் காதுகுத்து அன்னைக்கு இந்த‌ அய்யனாருக்கு நேந்துவிட்ட‌ குதிரை. ஒவ்வொரு வ‌ருஷ‌மும் பள்ளிக்கூடம் திறக்குற அன்னைக்கு வந்து இது முதுகில என் மாமனோட அந்த புது வருச வகுப்பை அய்யனாரு சாமிகிட்ட இருக்கும் கரிச்சாந்தெடுத்து எழுதி வச்சது, கடைசி ப‌ரிச்சை அன்னைக்கு பாஸுன்னு வந்து எழுதி வச்சது எல்லாம் கிழவிக கண்ணுக்குத் தெரியுற மாதிரி மங்கலா தெரியுது பாருங்க.. அய்யோ.!!.. நான் முதல்ல எழுதின என் மரிக்கொழுந்து மாமன் பேரு பாதி அழிஞ்ச மாதிரி இருக்கே.. கடவுளே இதுக்காகதான் என்ன கூப்பிட்டியா..
என் மாமனோட பேரை அழுத்தி எழுதிகிட்டிருந்தேன்..
ரொம்ப அழுத்திட்டேனோ..? குதிரைக்கு வலிச்சிருச்சு போல, என் கண்களிலிருந்து ஊத்து வடியுதே..

ரொம்ப நாளா நான் உங்களுக்கு என் மாமனை பத்தி சொல்லவே இல்லையே... ..ம்.. மாச‌ந்த‌வ‌றாம போஸ்ட்கார்டு வாங்கி " நாங்க‌ எல்லாம் ந‌ல்லாயிருக்கோம் மாமா, நீ உன் உட‌ம்பை பாத்துக்க‌, ந‌ல்லா ப‌டி "ன்னு எழுதி க‌டுதாசி போட்டுருவேன்.. எந்த‌ ச‌ண்டைய‌ ப‌த்தியும் நான் மாம‌னுக்கு சொன்ன‌தில்ல.. அதுவே பாவம்.., தன்னந்தனி ஆளா கஷ்டப்பட்டு படிக்குது.. இதுல இதெல்லாம் வேற அதுக்கு சொல்லி ஏன் அதை கலக்கி விடணும்.. எப்படியும் ஒன்னு சேர்ந்துருவோமுங்கிற நம்பிக்கைதேன் எனக்குள்ள இருக்கே.. சேர்ந்துதேன் ஆகணும், எனக்குதேன் கல்யாண பந்தம்னாலே, "மரிக்கொழுந்து பந்தம்" தானே..!!. என்ன நான் சொல்லுறது..

மாமா ஊரு பக்கம் வந்து கிட்டதட்ட ஏழு மாசமாகப்போகுது.. கடைசி வருசமில்ல, படிப்பு வேலை கொஞ்சம் அதிகமாம், ஏதோ புராஜெக்டெல்லாம் பண்ணனுமாம்.. ஆனாலும் மாமா மறக்காம எனக்குத் தனியா கடுதாசி போட்டுருவாங்க, மரிக்கொழுந்து வாசத்தோட.. எனக்கு மரிக்கொழுந்து தானே புடிக்கும்.. அதேன் என் மாமா கடுதாசியில மரிக்கொழுந்து பூவை தேச்சுத்தேன் அனுப்பும்..

பட்டணத்துக்கு மாமாவை பார்க்கப்போன பெரிய மாமாவும், அத்தையும் மாமாகிட்ட நடந்த சமாச்சாரத்தெல்லாம் சொல்லிருப்பாங்க போல.. அதேன் "பொய் சொல்ல‌ க‌த்துகிட்டியாடி என் பொம்மி; இன்னும் கொஞ்ச‌ நாளு பொருத்துக்கோ"ன்னு இந்த‌ மாச‌ம் போட்ட‌ க‌டுதாசியில‌ சொல்லியிருந்தாங்க மாமா.. அய்யோ!! என‌க்குள்ள ஏதோ ப‌ண்ணுதே..

என‌க்கு என் மாம‌ன் ஆத‌ர‌வு அந்த நேரத்தில கட்டாயத் தேவையா இருந்த‌து.. என்னையும் மீறி என் மனசு எதை, எதையெல்லாமோ நினைக்குது, கடந்து துடிக்குது.. என் செம்மியை (அதேன் எங்க‌ செம்ம‌ண் குதிரை) க‌ட்டி புடிச்சு அது முதுகில‌ என் க‌ன்ன‌ம் சாச்சு க‌ண்ணீர் வ‌டிச்சுட்டுருந்தேன்.. ஒரு தொடுத‌லில‌ நான் பூத்தேனே அதே உண‌ர்வை நான் உண‌ருகிறேனே இப்ப‌ன்னு திரும்பி பார்த்தா என் மாமா நிக்குது..
என‌க்கு நான் பார்க்குற‌து க‌ன‌வா, உண்மையான்னு, எதையும் நினைக்க‌த் தோண‌லை, எதுவும் பேச‌வும் முடிய‌லை..

பொங்க‌ப் பானை பொசுக்குன்னு பொங்குற‌ மாதிரி நானும் என் அழுகையும் பொங்க‌ ஆர‌ம்பிச்சுட்டோம்.. என் தோள‌ தொட்ட‌ கையில‌ அப்ப‌டியே த‌லை சாச்சுட்டேன்.. கண்ணுலேருந்து ம‌லை, ம‌லையா த‌ண்ணி, வாயி ஏனோ சிரிக்க‌த் துடிக்குது.. அன்னைக்குத்தேன் என் மாம‌னோட‌ க‌ண்ணுலேருந்து முத‌ முத‌ல்ல‌ த‌ண்ணிய‌ பார்த்தேன்..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

-----------****---------------

வாசற்படி‍-4

Tuesday, November 20, 2007

வாசற்படி‍-4



"என்ன ஆச்சுந்த‌., ஏன் இங்க வந்து உக்காந்து அழுதுகிட்டிருக்க"ன்னு கைமேல சாய்ஞ்சவள தன் தோளுல சாச்சு, என் தலையை வருடிக்கொடுத்துகிட்டே கேட்டுச்சு என் மாமா.. இந்த ஆதரவு இல்லாமத்தானே எல்லாம் இருந்தும், நாதியத்தவளா கிடந்தேன் இம்புட்டு நாளும்...

என் தேம்பலையும், ஆசுவாசத்தையும் அடக்கி நிமிர்ந்து என் மாமனைப் பார்த்தேன்.. நான் கேட்க நினைத்ததை என் வாயும், கண்ணும் சொல்லத் தடுமாறினாலும், அர்த்தம் புரிஞ்சுகிட்ட என் மாமா, "உன் நினைப்பு ரொம்ப‌ அதிக‌மாயிடுச்சு, என்னால எந்த‌ வேலையும் ச‌ரியா செய்ய‌ முடிய‌லை.. அதேன் காலேஜிக்கு லீவு போட்டுட்டு, உன்னை பாத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னை எனக்குத் திருப்பிக்கொடுன்னு கேட்டு வாங்கிகிட்டு, அப்படியே ந‌ம்ப குடும்ப‌த்துல‌யும் என்ன‌தான் ந‌ட‌க்குதுன்னு பாத்துட்டுபோலாமுன்னு வ‌ந்தேன்"னு என் நெத்தியில‌ முட்டிச் சொன்னாக‌..

ப‌ஸ்ஸுல வ‌ரும்போது ந‌ம்ப‌ பாக்கிய‌ம் ப‌ய‌லைப் பார்த்தேன், அவ‌ன்தேன் ந‌ம்ப‌ குடும்ப‌த்துல ந‌ட‌க்குற‌ கூத்தையும், உன் பாட்டையும் முழுக்க விவரமா சொன்னான்.. "உன்னால பொம்மிய பார்க்க‌ கூட‌ முடியுமா என்ன‌ன்னு தெரிய‌லடா"ன்னும் சொன்னான்.. என் பொம்மிய பார்க்க‌ யாருகிட்ட‌ உத்த‌ர‌வு வாங்க‌ணும்னு என‌க்குள்ள‌ ஆத்திர‌ம் பொங்கினாலும், ஏன்னே தெரிய‌ல இந்த அய்யனார‌ப் பார்த்து ஒரு ஆத‌ர‌வு ஓட்டு வாங்கிகிட்டு, எதாவ‌து பிர‌ச்ச‌னையினா உன் குதிரையை குடுத்து உதவு, நாங்க‌ தூர‌தேச‌ம் போயி வாழ‌ன்னு சொல்ல‌லாமுன்னு வ‌ந்தா.. அவ‌ரு என் பொம்மிய‌வே என் கிட்ட‌ குடுத்துட்டாரு"ன்னு ந‌க்க‌லா என் க‌ண்ணத் தொட‌ச்சிவிட்டுகிட்டே சொன்னாங்க‌ என் மரிக்கொழுந்து.

"ரொம்ப ப‌ய‌ந்துட்டியா.., 'நீதேன் என‌க்கு நாந்தேன் உன‌க்கு' இதை யாரால‌யும் மாத்தி எழுத‌ முடியாது.. நீ என்னைக்கோ உன் ம‌ரிகொழுந்தோட‌ பொண்டாட்டியாயிட்ட, இப்ப‌டி தொட்டாச்சினுங்கி பொண்டாட்டியா யாரோ ஏதோ சொன்னதுக்கெல்லாம் அழ‌லாமா"ன்னு கேட்டுச்சே.!.என் மச்சான்.!., என‌க்கு இந்த‌ உல‌க‌மே ம‌ற‌ந்து போச்சு..

"என்ன அப்ப‌டி பார்க்குற‌, இப்ப‌ சொல்லு.. நீ யாரு பொண்டாட்டி?"ன்னு என்னை என் மாமா உலுக்க‌, நான் என் மாம‌ன் க‌ண்ணுலேருந்து எனக்காக வ‌டிஞ்சிருந்த அந்த‌ உசிருத்த‌ண்ணிய தொட‌ச்சிவிட்டேன்..
ஏதோ ஆடு, மாடுக ச‌த்த‌ம் கேட்டு குள‌த்துப்ப‌க்க‌ம் திரும்பி பார்த்தா, கொல்லைக்காட்டுலேருந்து ஆடு,மாடுக‌ளை ஓட்டிகிட்டு அத்தை வ‌ந்துகிட்டு இருந்தாங்க‌.. அதுக்காங்குள்ளியும் என் அத்தானை நான் பிரியப்போறேனான்னு, ஒன்னும் விளங்காம திரு, திருன்னு முழிச்சிகிட்டுருந்தேன்.. ஏதோ சுதாரிச்சதில மாமனோட‌ கைப்பிடிய மட்டும் விலக்க முடிஞ்சுது.. அத்தை எங்களை பார்த்துட்டாங்க..

யாரதுன்னு உத்து பார்த்த அத்தை, அய்யனாரு மேட்டுல நிக்குறது நானும் மாமாவுங்கிறதை கண்டுபிடிச்சிட்டாங்க. "முருகேசு..!.. எப்படா வந்த.. ஏன் இங்க நிக்குற? "ன்னு ஆச்சர்யபட்டு கேட்க, "இப்பதாம்மா வந்தே..ன்.. பொம்..மி...ன்னு" மாமா திக்கித் திணர, அத்தை என்னை கோபமா பாத்துட்டு "வா வீட்டுக்கு"ன்னு மாமாவை கைய புடிச்சு இழுத்துட்டு போயிட்டாங்க.. என்னால பின்னாடியே ஓடவும் முடியாம, மாமாவும் என்ன திரும்பி திரும்பி பார்க்க, நான் முழிச்சிகிட்டே தயங்கி தயங்கிப் பின்னாடியே வந்தவ‌ எப்படியோ வீடு போயி சேர்ந்தேன்..

என்ன நடக்கபோகுதோ, எதெல்லாம் வெடிக்கப்போகுதோன்னு பட படத்து வீட்டுத் தாழ்வார சன்னலு வழியா வாரியையும், எங்க மாமா வீடு இருக்கும் கோடியையும் பாத்துகிட்டு உக்காந்துருந்தேன்..

"என்னை ப‌டுக்க‌வ‌ச்ச‌து ப‌த்தாதுன்னு இப்ப என் பிள்ளையையும் ப‌றிக்க‌ க‌ட‌ந்து அலையுது கொள்ளிவாயி பிசாசு"ன்னு ச‌க‌ட்ட‌மேனிக்கு க‌த்திகிட்டேதேன் (இல்ல‌ என்னை திட்டிக்கிட்டேதேன்) வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காக‌ எங்க‌ அத்தை.

"முறைப்பாடு போட்டு வெட்டி விட்டாச்சு, இனி சொந்த‌முமில்ல ப‌ந்த‌முமில்ல‌, க‌ட‌ந்து துடிக்காம‌ போயி ப‌டிக்கிற‌ வேலையை பாரு"ன்னு இழுத்துட்டு போன‌ பிள்ளைக்கு காபி த‌ண்ணிகூட‌ குடுக்காம‌ கராரா பேசியிருக்காக அத்தை..

ந‌ல்ல‌வேளை, ப‌திலுக்கு மாமா எதுவும் எதிர்த்து பேசாம "ப‌சிக்குது, சோத்த‌ போடும்மா"ன்னு கால‌ க‌ழுவிகிட்டே சொல்லிருக்கு.. இருந்த‌ ஆத்திர‌த்தையெல்லாம் சாப்பிடுறதுல தீர்த்துக்கிட்டு கொஞ்ச‌ம் பொறுமையா இருந்துருக்காங்க மாமா..

அத்தை கோப‌ம் த‌னுஞ்சி மெதுவா "இங்க‌ பாருடா, உன் ப‌டிப்புக்கெல்லாம் ட‌வுனுலேருந்து பொண்ணெடுத்தாதேன் கௌர‌வ‌மா இருக்கும், அந்த‌ த‌ர்த்திரிய‌ம் ந‌ம‌க்கு வேணாமுன்னு" சொல்லியிருக்காக‌..

"யார‌ம்மா த‌ர்த்திரிய‌ம்னு சொல்ற, அவ‌ கையால‌தானே விதைநெல்ல‌ சாமிக்கு ப‌டைப்ப.., இவ்வ‌ள‌வு நாளு ம‌க‌ராசியா, இந்த‌ வீட்டுக் க‌ன்னி தெய்வ‌மா தெரிஞ்ச‌வ இப்ப‌ ம‌ட்டும் உன‌க்கு எப்ப‌டி த‌ர்த்திரிய‌மா தெரியுறா.."ன்னு மாமா கேட்க‌, "தாய் மாம‌ன் வீட்டு ப‌சு மாட‌, அதுவும் நிற‌மாச‌ ப‌சுமாட‌ உல‌ வ‌ச்சு கொன்ன கொல‌காரிடா அவ‌.., உன‌க்கு என்ன‌ தெரியும் சாஸ்திர‌த்த‌ ப‌த்தி.. சில சிறுக்கிங்க ச‌மையிற நேர‌ம், முறைமாம‌ன் வீட‌ மூலையில‌யும் உக்கார‌வைக்கும், மிஞ்சி, மீறிப்போனா முழுசாவும் அழுச்சிடும்.. எந்த‌ நேர‌த்தில‌ ச‌மைஞ்சாலோ, என் குடும்ப‌த்தை உலுக்கி எடுத்துட்டா மூல‌ச்சிறுக்கி.. இப்ப‌தேன் அந்த‌ உற‌வ‌ வெட்டிவிட்டு நிம்ம‌தியா இருக்கோம், நீ எதையும் கிள‌றாத"ன்னு அத்தை ப‌தில் கொடுக்க‌, "நான் பொற‌ந்த‌நேர‌ம் உன‌க்கோ, அப்பாவுக்கோ ஆகாதுன்னு சொல்லியிருந்தா என்னை அப்ப‌வே கொன்னுருப்பியாம்மா"ன்னு மாமா கேட்க‌, அத்தை விக்கிச்சு ப‌தில் சொல்ல‌ முடியாம‌ நின்னுருக்காக‌..

"ம‌ண்ண‌ச்சந‌ல்லூருலேருந்து இருந்த‌ நில‌த்தையெல்லாம் வித்துட்டு ஒட்டி ஒட்டாம இருந்த‌ உற‌வோட‌ ஒத்து வாழ‌ இந்த சொந்த‌ ஊருக்கு வ‌ந்தோமே.. அப்ப‌கூட அந்த‌ ம‌ண்ண‌ச்சந‌ல்லூர் கிளி ஜோசிய‌க்கார‌னும், ஆவூரு உடுக்கை சாமியாரும் சொன்னாக‌ளேம்மா 'எனக்கு ச‌னிதிசை ந‌ட‌க்குது அதேன் இப்ப‌டி குடும்ப‌த்தை ஆட்டிப் ப‌டைக்குதுன்னு, அப்ப‌ ஏம்மா என்னை முறைப்பாடு போட்டு வெட்டி விட‌லை? அன்னைக்கே வெட்டிவிட்டுருந்தீன்னா இன்னைக்கு இந்த‌ உற‌வுமில்லாம‌, நானுமில்லாம‌ நீ நிம்ம‌தியா வாழ்ந்திருக்க‌லாமேம்மா..?.."ன்னு மாமா அணுஆதார‌மா கேட்க, அத்தையால எந்த‌ ப‌திலும் சொல்ல‌ முடிய‌லை..

"அவ‌ அப்ப‌ன் ஆத்தாளுகிட்ட‌ சொல்லி ஏதோ மந்திரம் பண்ணி அந்தச் சிறுக்கி உன்னை ம‌ந்திருச்சி விட்டுட்டா"ன்னு அத்தை க‌ண்ணை கொஞ்ச‌ நேர‌த்தில‌ க‌ச‌க்கிருக்காக‌..

அத்தை அப்ப‌டி சொல்லிருந்தாலும், மாமா கேட்ட‌ கேள்வில பொத‌ஞ்சிருந்த‌ உண்மையும், அதோட‌ தெளிவும் கொஞ்ச‌மாவ‌து அத்தைக்கு விள‌ங்கிருக்கும்ங்கிற‌து என்னோட‌ ந‌ம்பிக்கையாயிருந்துச்சு.. அதே ச‌ம‌ய‌த்தில‌ எனக்குள்ள ஒரு ப‌யமும் வேண்டுதலுமிருந்துச்சு "எங்க அந்த‌ ட‌வுனு சின்ன‌ம்மா எதையாவ‌து சொல்லி அத்தை புத்திய‌ திசை திருப்பிடுமோ"ன்னு..

அடுத்த‌ நாளு காலையில மாமா எங்க‌ வீட்டுக்கு வந்திருந்தாங்க‌.. நாந்தேன் முத‌ல்ல‌ பார்த்துட்டு பாயெடுத்து போட்டுட்டு அம்மாவ‌ கூப்பிட்டேன்..

அம்மாவுக்கு தான் த‌ம்பி புள்ள‌ வ‌ந்து நிக்குதேங்கிற‌ பாச‌மிருந்தாலும் "தான் த‌ம்பியே இல்ல‌ன்னு ஆயிடுச்சு.. த‌விர‌ இத‌னால‌ இன்னும் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ருமோ"ன்னு ப‌ய‌ம்.. "த‌ப்பா எடுத்துக்காத‌ முருகேசு, ஏற்க‌னவே இங்க‌ ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள், இன்னும் இவ‌ளுக்கு ஊர‌றிய ராசியில்லாத‌வ‌ன்னு பொட்டுக‌ட்டாததுதேன் பாக்கி.. படிச்ச புள்ள, த‌ய‌வுசெஞ்சு நீயே புரிஞ்சுகிட்டு போயிடு.. உங்க‌ அம்மா வ‌ந்து எதாவ‌து ர‌க‌ளை செஞ்சா, உன்னை வ‌ச்சுகிட்டு எதிர்த்து நின்னு பேசுறதுக்கு என‌க்குத் தெம்புமில்ல, மாமாவுக்கு தெரிஞ்சா பெரியா வ‌ம்பாவும் போயிடும்"னு புற‌டியில அடிக்கிற‌ மாதிரி ப‌டார்னு பேசிட்டாங்க‌..
எங்க‌ அம்மா இப்ப‌டி பேசும்னு ச‌த்திய‌மா நான் நினைக்க‌வே இல்ல‌... சின்ன‌ வ‌ய‌சிலேருந்தே மாமாமேல பெரிய‌ ம‌னுசாலுக‌ளுக்கெல்லாம் நிறைய‌ பாச‌மும் உண்டு, ந‌ல்ல ம‌திப்பும் உண்டு. என்னால‌தானே மாமாவுக்கு என் அம்மா வாயிலேருந்து இப்ப‌டி ஒரு அவ‌மான‌ப் பேச்சுன்னு என‌க்கு ஆத்திர‌மா வ‌ந்துது.

ஆனா மாமா அதையும் பொருத்துகிட்டு," அத்தை, எத்த‌னை கோயிலுக்கு போனாலுஞ்சரி, நீங்க என் அத்தைங்கிற‌தையும், நான் உங்க‌ த‌ம்பி புள்ள‌ங்கிற‌தையும் மாத்த‌முடியாது, அதே மாதிரி பொம்மி என‌க்குத்தேன், இந்த‌ விதையை வித‌ச்ச‌து நீங்கல்லாம்தேன்.. உங்க‌ எல்லாத்தையும் விட‌ எனக்காக வேண்டிக்கிற‌தும் அவதேன், என‌க்காக‌ன்னு இருக்குற‌வ‌ளும் அவதேன்.. நீங்க பெரிய‌வ‌ங்க‌ எவ்வ‌ள‌வு வேணும்னாலும் கௌர‌வ‌ம் பாத்துக்கோங்க‌, எவ்வ‌ள‌வு வேணும்னாலும் ச‌ண்ட‌ போட்டுக்கோங்க அதுல நாங்க த‌லையிட‌ல, அதே மாதிரி நீங்க‌ளும், உங்க சண்டை எங்க‌ வாழ்க்கையில‌ மூக்க‌ நுழைக்காம‌ பாத்துக்கோங்க‌.. உங்க‌ விளையாட்டுல‌ எங்க‌ வாழ்க்கையை ப‌ழிகெடாவா ஆக்கிடாதீங்க.. இதைத்தேன் எங்க அம்மாகிட்ட சொல்லிருக்கேன்.. அதையேதேன் உங்ககிட்டயும் சொல்லிக்கிறேன், நான் வ‌ர்றேனுங்க அத்தை"ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு கிள‌ம்பிட்டாங்க‌..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

--------------------****------------------

வாசற்படி‍-5

Sunday, November 18, 2007

வாசற்படி‍-5

மாமா நிதான‌மா, நெத்திய‌டியா பேசின‌துல அம்மாவுக்கு வ‌லியிருந்தாலும், மாமாவோட‌ ப‌க்குவ‌மான‌ பேச்சு அம்மாவுக்குள்ள‌ கொஞ்ச‌ம் பூரிப்பையும் உண்டாக்கினுச்சுன்னுதேன் சொல்லனும்.. இல்லைனா "என்ன‌டி ம‌லைச்சு நிக்குற.?.போடி, போயி வேலைய‌ப்பாருடி பொழ‌ப்ப‌த்த‌வ‌ளே"ன்னு என்னை சொல்லுற‌மாதிரி அவுகளுக்கே சொல்லியிருப்பாங்க‌ளா..

.ம்..இப்ப சொல்லுங்க என் மாமனுக்கு நான் மரிக்கொழுந்துன்னு பேரு வச்சது சரிதானே..

வீட்டுப் பெரிய ஆம்பளைகளும், வேடிக்கைப் பார்த்த அனுபவமுள்ள ஊரு பெரிய ஆளுகளும் கேட்காத கேள்வியையும், பேசாத பேச்சையும் உளிக்கு உறைக்குற மாதிரி அடிச்சுப் பேசினது என் மரிக்கொழுந்து தானே..

என்ன.., மரிக்கொழுந்து வாசம் உங்க வரைக்கும் வீசுதுதானே..

ம்..சரி விஷயத்துக்கு வாரேன்..

மாமா வ‌ந்திருந்த‌ ரெண்டு நாளு எப்ப‌டி போச்சுன்னே தெரிய‌லை..

மாமாவைப் பார்க்க அந்த‌ ட‌வுனு சின்ன‌ம்மா த‌ன் பொண்ணைக் கூட்டிகிட்டு வ‌ந்திருந்தாங்க.. ஆனா மாமா அதை கொஞ்ச‌ம் கூட‌ க‌ண்டுக்காம‌ என் பிர‌ண்டுங்க‌ள பார்க்க‌னும் நான் வ‌ர்றேனுங்க‌ன்னு நாசுக்கா வெளியில கிள‌ம்பிடுச்சாம்..

"ரொம்ப‌ ம‌ரியாதையான‌ புள்ள, என்கிட்ட‌ போயி எதுக்கு இம்புட்டு ம‌ரியாதை, நானும் அத்தை தானே"ன்னு வேறு வித‌மா பெருமைய‌டிச்சுகிட்டாக‌லாம் அந்த‌ சின்ன‌ம்மா..

எனக்கா.. 'அட, அய்ய‌னாரே..'ன்னு இருந்த‌து.. என்ன‌ க‌ல‌க‌ம் மூட்டி விட‌ப்போறாங்க‌ளோ,என்ன‌வெல்லாம் சொல்லி எங்க‌ அத்தைய‌ குழ‌ப்ப‌ போறாங்க‌ளோன்னு ஒரே க‌வலைதேன் எனக்குள்ள..

"இன்னும் ஒரு ஒன்றை மாச‌த்துல‌ ப‌ரிட்சை முடிஞ்சிரும், அப்ப‌ற‌ம் அங்கிட்டு எப்ப‌டியும் ஒரு மாச‌த்துல‌ ட‌வுனுல எதாவ‌து ஒரு கம்பேனியில‌ வேலையை வாங்கிட்டு, இங்க வந்து இந்த‌ ஊருக்கே சாப்பாடு போட்டு தூங்க‌வ‌ச்சிட்டு உன்னை டவுனுக்கு க‌ட‌த்திட்டு போய‌ர்றேன்.. அப்ப‌ற‌ம் அதுக்கும்அங்கிட்டு ஒரு வ‌ருஷ‌த்துல‌ உன் தொட்டாச்சினுங்கி அழுகைக்குத் துணையா பிள்ளைய ஒன்ன‌ பெத்து எடுத்துகிட்டு நேரா இங்க‌ வ‌ந்து கொஞ்ச நாளு ந‌ம்ப‌ பிள்ளைய ந‌ம‌க்கு ஆத‌ர‌வா க‌த்த‌வோ, க‌றைய‌வோ சொன்னா.. க‌ண்டிப்பா எங்க‌ அம்மாச் ச‌த்த‌ம் அமைதியாயிடும்.. பிறகென்ன இந்த பொம்மி கற்பகத்துக்கு (என் அத்தை பேரு கற்பகம்) பொக்கிஷமாயிடுவா.. என் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம்‍.."னு என் காது டோலாக்க தன்விரலால தட்டிவிட்டு நக்கலும், சிக்கலுமா சொன்னாங்க என் மாமா..

"ஏன் மாமா அப்படி சொல்லுற, நான் இருக்க உன் பாடு ஏன் திண்டாட்டம்"னு கேட்டேன்..

"கற்பகம் உன்னைக் கொஞ்சும்போதெல்லாம் என்னை ஓரக்கண்ணால சைட்டுதானே அடிச்ச, இப்ப கற்பகத்து ஆதரவு இல்லங்கவும்தானே உன் மரிக்கொழுந்தை நினைச்சு ஏங்குற? மறுபடியும் கற்பகம் ஆதர‌வுன்னா என் பாடு பாவம் தானே"ன்னு என்னமா என்ன நையாண்டிப் பண்ணுனாகத் தெரியமா..

ம்..இதெல்லாம் மாமா ஊருக்கு போற‌துக்கு முன்னாடி அம்ம‌ன் கோயில் ப‌டித்துறையில உக்காந்து என் கூட‌ பேசிகிட்டிருந்த‌து.. மாமா ஊருக்குப் போயி ப‌த்து நாளாகுது.. அத்தையும், அம்மாவும் நேருக்கு நேரா எதுவும் பேசிக்கிற‌து கிடையாது.. மத்தபடி நான் ப‌ய‌ந்த‌ மாதிரி ரொம்ப‌ பெரிய‌ ச‌ண்டை எதுவும் ந‌ட‌க்க‌ல..இந்த‌வாட்டி ட‌வுனு சின்ன‌ம்மாவோட ம‌ந்திரி வேலை எதுவும் ச‌ரியா மாஞ்சாப்போடலை..

ட‌வுனு சின்ன‌ம்மாவோட‌ பொண்ண‌ப்ப‌த்தி நான் உங்க‌கிட்ட‌ சொல்லலையே..அழ‌குல‌யும், குண‌த்துல‌யும் என் மாம‌னுக்கு பொருத்தமான‌வ‌ளான்னு என்கிட்ட‌ கேட்டுறாதீங்க‌.. ஏன்னா இந்நேர‌ம் உங்க‌ளுக்கே என்ன‌ப்ப‌த்தியும், என் மாமனைப் பத்தியும் தெரிஞ்சுருக்க‌னும் .. இப்ப‌டிப்ப‌ட்ட‌ கேள்வி கேள்வியா ஆகுற‌துக்கு முன்னாடியே அது 'தீயில‌ போட்ட‌ ப‌ஞ்சா ஆயிரும்'னு... சரி, அந்த‌ பொண்ணைப் ப‌த்தி சொல்லுறேனே.. அவ‌ பேரு மேன‌கா.. ந‌ல்ல‌ உச‌ர‌மா, அழ‌கான‌ பொண்ணுதேன்.. ஆனா என‌க்குத்தேன் அவ‌ள‌ பாக்கும்போதெல்லாம் அவுக அம்மா முக‌மும், பேச்சும் நினைவுக்கு வ‌ர்ற‌தால‌ உள்ளூர‌ என‌க்கு கொஞ்ச‌ம் பயம்..கொஞ்ச‌ம் புடிக்காது.. சில‌ ச‌ம‌ய‌ம் தேவையேயில்லாம குளத்தாங்கரையிலயும், அடிபம்பு குழாயில தண்ணி பிடிக்கும்போதும் என்னோட‌ வ‌ம்பு பிடிப்பா, என்னை ராசியில்லாதவன்னு கிண்டல் பண்ணுவா.. சில‌ ச‌ம‌ய‌ம் என‌க்காக விட்டு கொடுப்பா.. எங்க‌ அம்மா அப்ப‌டி பேசின‌தெல்லாம் ம‌ன‌சில‌ வ‌ச்சுக்காத‌ப்பான்னு சொல்லுவா.. நல்லவதேன்னு வச்சுக்கோங்களேன்.. நம்ப ஏன் அநியாயமா ஒரு பொண்ணைப் பத்தி பேசி பாவத்தைச் சம்பாதிக்கனும்...

ச‌ரி இப்ப‌ என் க‌தைக்கு வ‌ருவோமே... அந்தப் ப‌த்து, ப‌ன்னெண்டு நாளு, உண்மையிலே நான் எல்லா ப‌ய‌த்தையும் ம‌ற‌ந்து ப‌ழைய‌ ப‌டி ரொம்ப‌ ந‌ம்பிக்கையோட‌ என் மாம‌னுக்காக‌ காத்துகிட்டுருந்தேன்.. அந்த வெள்ளிக்கிழமை மாமா ப‌ரிட்சையில‌ பாசாகணும், சீக்கிர‌மா வேலை கிடைக்க‌ணும்னு எங்க‌ ஊரு அம்ம‌னுக்கும், அய்ய‌னாருக்கும் மாவிள‌க்கு போட்டேன்.

ஆனா அம்ம‌ன் கோயில்ல‌ உடைச்ச தேங்காதேன் ச‌ரியில்லாம‌ போயிடுச்சு.. சாமிக்கு உடைக்குற‌ தேங்காய் ச‌ரியில்ல‌ன்னா ஏதோ த‌காத‌து ந‌ட‌க்க‌ப்போகுதுன்னு பூசாரி அய்யா சொன்னாரு. இத்த‌னைக்கும் அது எங்க‌ வ‌ய‌க்காட்டு தென்னை ம‌ர‌த்து தேங்காய்தேன்..அவ‌ரு அந்த‌ வார்த்தையை சொன்ன‌வுட‌னே ஊருக்குள்ள‌ இருக்குற‌ கடையிலேருந்து ஒரு தேங்காய‌ வாங்கி வ‌ந்து சாமிக்கு உடைச்சிட்டேன்..

"அம்மா, என்ன தப்பு நடந்துருந்தாலும் தண்டனையை எனக்குக் கொடு, என் மாமனை நீதேன் பத்திரமா பாத்து காத்து நிக்கணும், தயவுசெஞ்சு அருள் புரிம்மா"ன்னு பய, பத்திரமா மனமுறுகி வேண்டிக்கிட்டேன்..ஆத்தா புண்ணிய‌த்துல அந்த‌ காயி ந‌ல்ல‌ காயா இருந்த‌து, ந‌ல்ல‌ப‌டியா உடைஞ்ச‌து..

இருந்தும் என்ன‌வோ தெரிய‌லை உடைஞ்ச‌ அந்த‌ அழுகுன‌ தேங்காயும், பூசாரி அய்யா சொன்ன வார்த்தையும் அடிக்கடி என‌க்குள்ள‌ வ‌ந்து வ‌யித்துல‌ புளிய‌க்க‌ரைச்சுதுங்க‌...

விடிஞ்ச‌தும் இற‌ங்க‌ப்போகுது ஒரு பெரிய‌ அடிங்கிற‌துக்கு அறிகுறியா, இல்ல‌ வேற‌ எதுவுமான்னு என‌க்கு ச‌ரியா விள‌ங்க‌லை..

காலையில‌ ஒரு ப‌த்தும‌ணியிருக்கும் ட‌வுனுலேருந்து ம‌ணிய‌க்காரு வீட்டுக்கு போனு.. அத்தை வீட்டுக்கு சேதி சொல்ல‌ சொல்லி.. ட‌வுனுலேருந்து அத்தை வீட்டுக்கு சேதி சொல்ல‌ சொல்லி போனுன‌வுட‌னே நான் ம‌ட்டும‌ல்ல‌ ஊரே அல்லோல‌ ப‌ட்டுருச்சு..

ஏற்க‌ன‌வே என் ம‌ன‌சுல‌ குடி கொண்டுருந்த‌ ப‌ய‌த்துல இந்த‌ சேதிங்கிற வார்த்தையே என்னை அரை நினைவுக்கு கொண்டுபோயிடுச்சு.. இதுல பாப்பாத்தி உன் மாமா, உன் மாமான்னு திக்கி இழுத்த‌துல‌ ரொம்ப‌ ப‌ய‌ந்து முழு நினைவும் போயி ம‌ய‌ங்கிட்டேன்..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

---------******--------------

வாசற்படி - 6

Friday, November 16, 2007

வாசற்படி - 6

க‌ண்ணு முழிச்சு பார்த்தப்பா 'என் வ‌யித்துல வ‌ந்து பொற‌ந்த‌து இப்ப‌டியா இருக்க‌னும்'னு த‌லையில‌ அடிச்சுகிட்டு அழுதாங்க அம்மா..

அய்ய‌ய்யோ.!!. என் மாம‌னுக்கு என்ன ஆச்சு, யாராவ‌து சொல்லித்தொலைங்க‌ளேன், என் மாம‌னை நான் பார்க்க‌னும்னு என்னை சுத்தி உக்காந்துருந்த என் சினேகிதிக‌ளை புடிச்சு உலுப்ப, "உன் மாம‌னுக்கு த‌லையில"ன்னு பாப்பாத்தி சொல்லாங்குளியும்..மங்கா, பாப்பாத்தி கைய‌ புடிச்சு அமுக்கி அவ‌ளே ப‌ய‌ந்த‌வ‌ கொஞ்ச‌ம் ப‌க்குவ‌மா சொல்லுடின்னா..

எனக்கு இவ‌ளுக‌‌ போடுற‌ பீடிகையில‌ நெஞ்சு ரொம்ப பட படன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு.. எங்க.., பட படப்பு பொறுக்காம‌ வெடுச்சிரும் போல‌ இருந்துச்சு..

க‌டைசியில‌ அஞ்ச‌லைதேன் சொன்னா "ஒன்னுமில்ல‌டி பொம்மி, உங்க‌ மாம‌ன் காலேஜில‌ ஏதோ பொருக்கி ப‌ச‌ங்க‌ளுக்குள்ள ச‌ண்டையாம், அந்த பசங்கள்ள உன் மாமன் பிரண்டும் இருந்தானாம்.. அவனைக் காப்பாத்த போனதுல முருகேசு தலையில கொஞ்சம் அடியாம்.. ஆஸ்பத்திரியில சேத்துருக்காகலாம்"..

மாமாவுக்கு பெருசா எந்த‌ ஆப‌த்துமில்லாட்டியும், த‌லையுல மட்டும்தேன் அடிங்கிற‌து கொஞ்ச‌ம் ப‌ட‌ ப‌ட‌ப்பை குறைச்சாலும்.. என‌க்கு ஏதொ ரொம்ப‌ ப‌ய‌மா இருந்துச்சு..என‌க்கு மாமாவை பார்க்கனும் போல‌ இருந்துச்சு..எப்ப‌டி என‌க்குள்ள அம்புட்டு தைரிய‌ம் வ‌ந்த‌துன்னே தெரியலை..

முத்த‌த்துல, வாச‌ல் முன்னாடி உக்காந்திருந்த என் அப்பாருகிட்ட‌ போயி "அப்பா என்ன‌ ட‌வுனுக்கு கூட்டிட்டு போங்க‌ப்பா, மாமாகிட்ட‌ கூட்டிட்டு போங்க‌ப்பா, நான் மாமாவை பார்க்கனும்"னு ம‌ண்டி போட்டு அழுதுகிட்டிருந்தேன்.. மூலையில உக்காந்து அழுதுகிட்டுருந்த‌ அம்மா, நாலுகாலு பாய்ச்ச‌லா விரைஞ்சு என் ஜ‌டையை பிடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள‌ வ‌ந்து போட்டு, வெள‌க்க‌மாத்தாலே என்ன விலாசு விலாசுன்னு விலாசிட்டாங்க‌..

என‌க்கு என் அம்மா அடிச்ச‌ அடிய‌ விட‌ சொன்ன‌ வார்த்தைகதேன் வ‌லிக்க‌ ம‌ட்டும் செய்ய‌லை.. ரொம்ப‌வும் ப‌ய‌மூத்திடுச்சு..

"ஏன்டி இந்த‌ குடும்ப‌த்துல‌ பொற‌ந்த‌.., அதுவும் என் வ‌யித்துல‌ வ‌ந்து பொற‌ந்த‌.. பெத்தவ நானே சொல்லக் கூடாது, இருந்தாலும் என் வாயிலேருந்தே சொல்ல வைக்கிறியேடி பாவி..ஊருல எல்லாத்தையும் உன்னைப் பத்தி பேச வச்சிட்டியேடி பாழாப்போறவளே.. வெளியில தலைகாட்ட முடியிலையேடி...நீ வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ நேர‌த்துல‌ குறைன்னா நீ வாழாமா போக‌ வேண்டியதுதானே, ஏன் இப்ப‌டி இந்த‌ குடும்ப‌த்தையும், எங்க‌ ம‌ரியாதைய‌யும், சொந்த‌த்தையும் சீரழிக்கிற‌?"..

அம்மாவோட வெளக்கமாறு அர்ச்சனையிலேருந்து என்னை என் அப்பாரும், சினேகிதிகளுந்தேன் விடிவிச்சுருக்காக.. ஆனா அது எதுவும் என‌க்கு விள‌ங்க‌லை...

உண்மையிலே மாம‌வுக்குத் த‌லையில சின்ன‌ அடிதானா.?. அம்மா என்னை இந்த அள‌வுக்கு பேசுறாங்க‌ன்னா, மாமாவுக்கு ஏதோ ஆயிருச்சோ.?.அய்யோ.. என‌க்கு பைத்திய‌ம் புடிச்சிரும் போல‌ இருந்துச்சு..நான் மாமாவைப் பார்க்க‌னும், நான் மாமாவைப் பார்க்க‌னும்னு புல‌ம்பிகிட்டே இருந்தேன்.. "அழாத‌டி பொம்மி, ப‌ய‌ப்புடாத‌டி.. முருகேசுக்கு ஒன்னுமில்ல, சீக்கிர‌மா ஊருக்கு உன்ன‌ப் பார்க்க‌ வ‌ந்துருவான்னு" பாப்பாத்தி சொன்னா..

ரெண்டு நாளா நான் எதுவும் சாப்பிட‌லை, மாமா.. மாமாவப் பார்க்கனும்னு அன‌த்திகிட்டேருந்தேன்.. அய்ய‌னாருகிட்ட‌யும், அம்ம‌ன்கிட்ட‌யும், ம‌னசால‌ கெஞ்சி கூத்தாடிகிட்டிருந்தேன்.. செம்மி முதுகுல என் மாமன் பேரையும் அது பாஸாகுறதுக்காக வேண்டிகிட்டு கரிச்சாந்தாலயும், கரிக்கொட்டையாலயும் அழுத்தி எழுதினதுக்கு மன்னிப்பு கேட்டுகிட்டிருந்தேன்.. என் மாமனை சரியாக்க சொல்லி மன்றாடிகிட்டுருந்தேன்..அடுப்பாங்க‌ரை மூலையை விட்டு அங்கிட்டுகிங்கிட்டு ந‌க‌ர‌லை.. என‌க்கு என் மாம‌னைப் ப‌த்தின‌ சிந்த‌னையைத் த‌விர‌ வேற‌ எதுவும் இல்ல..

என் சினேகிதிங்க‌தேன் மாறி மாறி ஒவ்வொருத்தியா வ‌ந்து என்னை 'அழாத‌டி நீ ப‌ய‌ப்புடுற‌ மாதிரி ஒன்னுமில்ல‌'ன்னு ஆருத‌ல் சொல்லிகிட்டிருந்தாங்க‌..

க‌டைசில என் கோல‌த்தை பார்க்க‌ ச‌கிக்காம பாப்பாத்தி எங்க‌ அம்மா கிட்ட‌ ச‌ண்டைக்கு போயிட்டா.. " இங்க‌ பாரு நீயெல்லாம் ஒரு அம்மாவா.. அவ‌ளே ப‌ய‌ந்த‌வ‌.. வெறும‌ன ட‌வுனுலேருந்து சேதிங்கிற‌தை கேட்டே ம‌ய‌ங்கி விழுந்தா.. பாதி நாளு பேச்சு மூச்சில்லாம‌ கிட‌ந்தா.. யாரோ ஏதோ சொன்னாங்கங்கிற‌துக்காக உன் ஆங்கார‌த்தை அவ‌கிட்ட‌தேன் காட்ட‌ணுமா.. நீ சொன்ன‌த வ‌ச்சி முருகேசுக்கு என்ன‌வோ ஏதோன்னு இந்த‌ பைத்திய‌க்காரி ப‌ய‌ந்து கிட‌க்குறா..நீயே சொல்லு உன் வாயால‌, முருகேசு நல்லா இருக்கான், அவ‌ ப‌ய‌ப்படுற‌ மாதிரி அவ‌னுக்கு ஒன்னும் கிடையாதுன்னு.. " சொன்னா..

எங்க‌ அம்மா என்னைக் க‌ட்டி அணைச்சு அழுதாங்க‌.. " நீ நினைக்கிறாப்புல முருகேசுக்கு ஒன்னுமில்லடி, "சண்டையில முருகேசு த‌லையில லேசா காய‌ப்ப‌ட்டுருச்சு, ஆஸ்ப‌த்திரியில சேர்த்துருக்கோம், கொஞ்ச‌ம் வ‌ந்து பாத்துக்கோங்க"ன்னு போனு ப‌ண்ணிருக்காங்க‌.. உங்க‌ அத்தை ரொம்ப‌ பெருசா ஒப்பாரி வ‌ச்சிட்டு அப்ப‌வே உன் பெரிய‌ மாமாவோட ட‌வுனுக்கு கிள‌ம்பி போயிட்டா..

அந்த‌ உசில‌ம்ப‌ட்டியாதேன் எதிர்த்த வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு ரொம்ப கேவல‌மா உன்னைப் பத்தியும், நம்ப குடும்பத்தை பத்தியும் பேசிட்டா.. முருகேசுக்கு ஒன்னுன்னவுடனே என்னாலயும் எதிர்த்து பேச முடியலை.. 'நம்ப குடும்பத்தையே சூனியக்கார குடும்பம், நய வஞ்சகக்கூட்டம்னு பல வாரியா ரொம்ப பழைய குடும்ப சண்டையெல்லாம் எடுத்து வச்சு பேச ஆரம்பிச்சிட்டா.. நானும் எம்புட்டுதேன் பொறுத்துப்போக, அதேன் , "பனமரத்துக்கீழ நின்னவனுக்கு தேள் கொட்டினா, தென்னமரத்துக்கீழ நின்னவனுக்கு நெறி கட்டினாப்புலடி கதைக்கிற.. என் தம்பி குடும்பத்து மேல எனக்கில்லாத அக்கரை உனக்கென்னடி"ன்னு நான் கேட்க அவளும் பதிலுக்குப் பேச கொஞ்சம் பெரிய சண்டையாயிடுச்சு.. அந்த நேரம்னு வயலிலேருந்து வந்த உங்க அப்பா, 'வாரியில‌ நின்னு என்ன சண்டை உள்ள போ'ன்னு என்னதேன் அதட்டினாரு.. ஆனா அவ கொஞ்சம் கூட ஆம்பளைங்கிற‌ மட்டு, மரியாதையில்லாம உங்க அப்பாவைப் பார்த்து "ம்க்கும்.. விதியத்தவனுக்கு வெட்டி வீறாப்பு", "என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி ஒரு த‌ர்த்திரிய‌ம் இருந்திருந்தா இப்ப‌டி ஊருக்கும், உற‌வுக்கும் சுமையாயில்லாம‌, எங்காவ‌து க‌ண்கானாத‌ ஊருல‌ உள்ள‌ கோயிலுக்கு நேந்துவிட்டுட்டு வ‌ந்திருப்பேனே ஒழிய‌ இப்ப‌டி மேய‌விட்டுட்டு உக்காந்திருக்க‌ மாட்டேன்.. 'நான் ஒருத்தி நாளும் உதுத்த‌துக‌கிட்ட போயி கோயில‌ ப‌த்தியும் சாமிய‌ப்ப‌த்தியும் பேசுறேனே'.. "ன்னு அநியாய‌த்துக்கு கேவ‌ல‌மா பேசிட்டா..

"கட்டினவனுக்கு தலகுனிவு நான் பெத்துவச்சிருக்குறதுனாலதானே"ன்னு உன் மேல ஆத்திரப்பட்டுட்டேன்டி இந்த அவலச் சிறுக்கி.. "முருகேசு நல்லா தான்டி இருக்கான், நீ எங்களுக்கு வேணும்டி"ன்னு என்னை கட்டிப் புடிச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க என் அம்மா.. இருந்தும் என‌க்கு ந‌ம்பிக்கையில்ல‌.. என‌க்கு என்மேலவே ரொம்ப‌ ப‌ய‌ம் வ‌ர‌ ஆர‌ம்பிச்சிடுச்சு..மாம‌னை பார்க்க‌ப் போன‌ மாம‌ன் பிர‌ண்டுக‌ள்ல‌ ப‌ல‌ பேரும், ஊருல‌ அப்பாவ ம‌திக்கும் ப‌ல‌ பெரிய‌ ஆம்பிளைக‌ளும் வ‌ந்து 'முருகேசு ந‌ல்லா இருக்காம்மா'ன்னு சொன்னாங்க‌.. அப்ப‌வும் என‌க்கு ந‌ம்பிக்கை வ‌ர‌லை..

ட‌வுனுலேருந்து அத்தையும் மாமாவும் ம‌ட்டுந்தேன் திரும்பி வ‌ந்தாங்க..மாமா பிர‌ண்டு பாக்கிய‌ம் சொன்னான் 'மாமாவுக்கு ப‌ரிட்சை இருக்குற‌தால, மாமா ப‌ரிட்சையை முடிச்சிட்டு ஊருக்கு வ‌ரும்'னு..

அத்தை சொன்னாங்க "க‌ண்ட‌வுக‌ க‌ண்ணுப‌ட வேண்டாமுன்னுதேன் ட‌வுனுலே விட்டுட்டு வ‌ந்துருக்கோம்'னு..

இருந்தும் என் ஆசுவாச‌த்தை என்னால அட‌க்க‌ முடிய‌லை..ந‌ல்ல‌ வேளை அடுத்த‌ நாளு கொல்லைக்கு பாப்பாத்தியோட போகையில பெரிய‌ மாமாவைப் பார்த்தேன்.. பாப்பாத்திய கூப்பிட்டு மாமாவே சொன்னாக, 'அவ‌ன் ந‌ல்லா இருக்காம்மா, பரிச்சை முடிஞ்ச‌வுட‌னே வ‌ந்துருவான்..காய‌மெல்லாம் ஓர‌ள‌வு ஆர‌ ஆர‌ம்பிச்சிடுச்சு'ன்னு.. அப்பாடா... அதக் கேட்ட‌வுடனே, என‌க்குள்ள‌ ஒரு சின்ன‌ பெருமூச்சு.. அந்த‌ இட‌த்துலே அய்ய‌னாரு சாமிகிட்ட‌ வேண்டிக்கிட்டேன் "சாமி, என் மாம‌னை ப‌த்திர‌மா பாத்துக்க‌, ந‌ல்ல‌ப‌டியா அது ப‌ரிட்சை எழுதி ஊரு வந்து சேர‌ணும்.. நான் உனக்காக‌ கையில‌ க‌ற்பூர‌ம் ஏத்திக்கிறேன்னு"..

மாமா ஊருக்கு வ‌ர‌ப்போற‌ நாளுக்காக‌ வ‌ழிமேல‌ விழிவ‌ச்சு, அசோக‌ வ‌ன‌த்து சீதையா காத்திருந்தாலும், ம‌ன‌சுக்குள்ள‌ "அம்மா அன்னைக்குச் சொன்ன‌ வார்த்தைக‌ளும், அந்த‌ சின்ன‌ம்மா அம்மாவையும், அப்பாவையும் பேசின‌ பேச்சும்" வ‌ந்து வ‌ந்து ஏதோ ச‌குன‌ம் சொல்லிகிட்டுருந்துதுங்க‌..

..ஆச்சு.. அத்தை ஊரு பெரிய‌வ‌க‌ள தனியா கூப்பிட்டு எங்க குடும்ப‌த்தை க‌ண்டிக்க‌ச் சொல்லியும், உற‌வை வெட்டிவிட‌ச் சொல்லியும்" முறையிட்டுட்டாங்க..


(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

-----------***----------

வாசற்படி - 7

Wednesday, November 14, 2007

வாசற்படி - 7

ம‌ணிய‌க்காரு வீட்டு முத்தத்திண்ணையிலதேன் (அது கொஞ்சம் பெரியத் திண்ணை) பேச்சு வார்த்தை.. ரெண்டு குடும்ப‌த்து பெரிய‌ ஆளுங்க, அப்ப‌ற‌ம் ஊரு பெரிய‌ ஆளுங்க எல்லாம் கூடியாச்சு, அத்தையோட முறையீட‌ கேட்க‌..

"ஏதோ சொந்த‌ ஊருல‌ வ‌ந்து வாழ‌ வ‌ந்தோம், நல்லா வாழ்ந்தோம், ஆனா இன்னைக்கு அந்த‌ சொந்த‌மே எங்க‌ள குட‌ல‌றுக்குது.. புடிக்கலைன்னுதேனே முறைப்பாடு போட்டுகிட்டோம், அப்ப‌ற‌முமேன் எங்களோட‌ வ‌ந்து ஒட்டுறாங்க‌.. எங்க‌ளுக்கு அந்த வீட்டு உறவும் வேணாம், பொண்ணும் வேணாம்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ந‌ல்ல‌ப‌டியா பேசி, பின்னாடி பிர‌ச்ச‌னையெதுவும் வாராம உறுதி வார்த்தை கொடுத்து முடிச்சு விட்டீங்க‌ன்னா இந்த‌ ஊருல‌ இருக்கோம், இல்ல‌ன்னா நாங்க‌ இந்த‌ ஊரை விட்டேப் போறோம்"னு க‌ட்ட‌ன்ரைட்டா பேசிட்டாங்க‌ எங்க‌ அத்தை..

'எல்லாம் கேப்பாரு பேச்சு கேட்டு வ‌ந்த‌ புத்தி'ன்னு என் சினேகிதிக‌ளும் தெரிஞ்ச‌வ‌க‌ளும் சொன்னாக‌..

"என்ன‌தேன் கேப்பாரு பேச்சுன்னாலும், கேட்ட‌ என் அத்தைக்கு எங்க‌ போச்சு புத்தி.. என்னால‌ எப்ப‌டி என் மாம‌னை பிரிஞ்சு இருக்க‌ முடியும்?, இல்ல‌ மாமாவால‌தேன் என்னை பிரிஞ்சு எப்ப‌டி இருக்க‌ முடியும்.?. அதுக்கு எல்லாத்துக்கும் கார‌ணமா இருக்குற என் ராசியை, என்னையை விஷ‌ம் வ‌ச்சு கொன்னு போட்டுருங்க‌ன்னு சொல்லியிரு ந்தாலும்" நான் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டுருப்பேன்.. அத்தைக்கு ஏன் எங்க ம‌ன‌சு புரிய‌லை... அத்தைக்குப் புரிய‌லையா?, இல்லை எங்க‌ள‌ ப‌டைச்ச‌ அந்த ஆண்ட‌வ‌னுக்குப் புரிய‌லையா.?..

"க‌ற்ப‌க‌ம் சொல்லுற‌துலையும் நியாய‌மிருக்குதுல்ல‌ப்பா.. சாஸ்திர‌ம், ச‌ட‌ங்கு, சாமிச்ச‌ட்ட‌ம் எல்லாம் உண்மைதானேப்பா.. அது சொல்லுறாப்புல, அது குடும்ப‌த்துக்கும் தொட‌ர்ந்து அடி மேல‌ அடி விழுந்துகிட்டுதானே இருக்கு.. அதுவுமில்லாம‌ சுத்துப்ப‌ட்டியில‌ இருக்குற.. கிராம‌ம் க‌ண்ட‌ வ‌ரையிலும் தெரியும், வீர‌மாகாளிய‌ம்ம‌ன் சாமி அருளும், அது முறைப்பாடுச் ச‌ட்ட‌மும்..இது எல்லாம் தெரிஞ்சும் உற‌வு கொண்டாடிகிட்ட‌து நியாய‌மில்ல‌.. ந‌ம்ப‌ளால ந‌ம்ப‌ சுத்தியிருக்குற‌வ‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து நட‌க்காட்டியும் கெடுத‌ல் ந‌ட‌க்காம‌னாவ‌து பாத்துக்க‌னும்.. அத‌னால க‌ற்ப‌க‌த்தோட‌ முறையீட‌ ந‌ம்ப‌தேன் ஏத்துகிட்டு எல்லாத்துக்கும் ஏத்த‌மாதிரி ந‌ல்ல‌து ப‌ண்ண‌னும்..அதே ச‌ம‌ய‌த்தில‌ கூட‌ப்பிற‌ந்த‌ உட‌ன் பிற‌ப்புக‌ வாயிலேருந்து வார்த்தை எதுவும் வாராம, ந‌ம்ப‌ எந்த‌ முடிவும் எடுக்க‌ முடியாது.. நீ என்ன‌ சொல்லுற த‌ங்க‌வேலு"ன்னு (என் பெரிய‌ மாமா)ம‌ணிய‌க்கார‌ரு என் பெரிய‌ மாமாவ‌ப் பாத்து கேட்க..

"நாங்க‌ளும் சில சாமி ஆடுற‌வ‌க‌கிட்ட‌ சாமி கேட்டுட்டோம் 'பொண்ணு எடுக்க வேணா'முன்னுதேன் சாமி குறி சொல்லிருக்கு.. அதேமாதிரி வீர‌மாகாளி கோயில்ல‌யும் முறைப்பாடு போடுற‌துக்கு முன்னாடி சாமிகிட்ட‌ உத்த‌ர‌வு வாங்கினோம்.. ஆனா அதை மீறி நடந்தது சாமிக் குத்தமா ஆயிருந்தாலும், மத்த குறியெல்லாம் வச்சு பார்க்கும்போது , பொண்ணு வேணாமுன்னுதேன் தோணுது.. அதுதேன் ரெண்டு குடும்ப‌த்துக்கும் ந‌ல்ல‌துன்னு தோணுது.. என்னால உறவைப் ப‌த்தி எதுவும் இப்ப சொல்லுற‌துக்கில்ல'ன்னு சொல்லி பெரிய‌ மாமா, என் த‌லையில ம‌ண்ணை வாரி போடுவாருன்னு நான் எதிர்பார்க்க‌லை..

என‌க்கு, பெரிய மாமா சொன்ன‌தை குத்த‌ம் சொல்லுற‌தா இல்ல என்ன‌ இப்ப‌டி அணு அணுவா, அங்க‌ அங்க‌மா நோக‌டிக்கிற‌ ஆண்ட‌வ‌னை குத்த‌ம் சொல்லுறதான்னே தெரிய‌லை..

அம்மாவால‌யும், அப்பாவாலயும் அவ‌மான‌த்துல எதுவும் பேச‌ முடிய‌லையாம்.. தான் நிலைமை ஒரு தீண்ட‌த்த‌காத‌ நிலைமையா ஆயிடுச்சே.. ப‌ண‌ங்காசு நிறைய‌ இல்லாட்டியும்.., ம‌திப்பும், ம‌ரியாதையாயுமா வாழ்ந்த‌ ஊருல‌ பிராது வாங்கி த‌லைகுனிஞ்சு நிக்க வேண்டிய‌தா இருக்குதேன்னு அப்பாக்குள்ள‌ ஆத‌ங்க‌ம் வெடிக்க‌ ஆர‌ம்பிச்சிருச்சு..

"க‌ற்ப‌க‌ம் த‌ங்க‌ச்சி சொன்ன‌ பிராதை நான் ஏத்துக்குறேன், ஊரு பெரிய‌வ‌க‌ பாத்து என்ன‌ முடிவெடுக்குறீங்க‌ளோ அதுக்கு எங்க‌ குடும்ப‌ம் க‌ட்டுப்ப‌டும்"னு எங்க அப்பாரும் கோனாங்கித் தனமா வார்த்தை கொடுத்துட்டாரு..

"மாரியப்பன் பிராதை ஏத்துகிட்டதாலயும், மதிக்கிறதாலயும், பிரச்சனையை சுமூகமா தீர்க்கலாமுன்னு நினைக்கிறோம்..இப்போதைக்கு இந்த‌ ரெண்டு குடும்ப‌த்துக்கும் இடையில எந்த ஒரு உற‌வும் வ‌ச்சுக்க‌ வேணாம், அதே மாதிரி பொம்மிய‌ தாய் மாம‌ன் வீடு இல்லாம‌ வேற‌ இட‌த்தில க‌ட்டிகொடுக்க‌ணும்னு சொல்லிக்கிறோம்னு" பேச்சு வார்த்தைய 'விளங்காத பய ஊருல வெளக்கெண்ணெய் பேச்சா'பெரிய ம‌னுச‌னுங்க‌ பேசி முடிச்சிட்டாங்க..

'கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினாலு வ‌ருஷ‌மா "புருஷ‌ன், பொண்டாட்டி"ங்கிற ஒரே புத்தியில சுத்தி வந்த உற‌வுதானே என‌க்கும் என் மாம‌னுக்கும் உள்ள‌ உற‌வு.. வ‌ன‌வாச‌மாம் எங்க‌ள் காத‌ல் வாழ்க்கையை முடிச்சு, க‌ல்யாண‌ங்கிற ப‌ட்டாபிஷேக‌த்தை ந‌ட‌த்தி வைப்பாங்க‌ன்னு பார்த்தா, எங்க‌ளை பாடையில ஏத்த‌யில்ல' பாக்கு வெத்த‌ல‌ போட்டு பேசியிருக்காக‌..

வ‌ய‌சாக‌ ஆக‌ பார்வைதானே ம‌ங்கிப்போகும், ம‌தியுமா ம‌ங்கிப்போகும்.!.

தான் பெத்த‌ புள்ளைக்கு உசிரோட‌ கொள்ளி வ‌ச்சிட்டு ஆத‌ங்கமா ந‌ட‌ந்துவாராறு என் அப்பா.. க‌ட்டின‌வ‌ன் வார்த்தைக்கு ம‌டியில‌ சும‌ந்த‌தை க‌ட்டையில ஏத்தி விட்ட என் க‌ட்டுக‌ழுத்தி (சும‌ங்க‌லி) காமாட்சி (என் அம்மா) க‌ண்ண‌ க‌ச‌க்கிகிட்டே வாராக பின்னால‌..

வ‌ந்த‌ அப்பா என் முக‌த்தை ஏறெடுத்தும் பார்க்க‌லை.. 'காமாட்சி, சாமிகிட்ட இருக்க‌ அந்த‌ ம‌ஞ்ச‌ப்ப‌ய எடு'ன்னாரு.. எடுத்துக்குடுத்தாக‌ என் அம்மா.. 'வ‌ர‌ப் பொழுதானாலும் ஆகும்'னு சொல்லிட்டு போயிட்டாரு.. 'எல்லாம் முடிஞ்சிருச்சு, க‌ண்ட‌தையும் ம‌ன‌சில‌ போட்டு உலட்டிக்காம சொன்னப் பேச்சை கேட்டு, செய்ய‌ச் சொல்ற‌தை செய்யி'ன்னு எதோ வீட்டு வேலைக்காரிகிட்ட‌ சொல்லுற‌ மாதிரி சொல்லிட்டு போயாச்சு என் அம்மா..

ந‌ட‌ந்த‌ விவ‌ர‌த்தையெல்லாம் ஒப்பிச்சுட்டு என் அம்மாவும், அப்பாரும் க‌ட்டுன‌க் கூத்தையும் பாத்துட்டு ந‌டைய‌க் க‌ட்டியாச்சு பாப்பாத்தி..

அடுத்த‌ நாளு காலையில‌தேன் ம‌ஞ்ச‌ப்பையி விவ‌ர‌ம் முழுசா தெரிய‌ வ‌ஞ்சுது.. பையில‌ இருந்த‌து என் ஜாத‌கமாம்.. உள்ளூருல இருக்குற‌வ‌க‌கிட்டயும், சுத்துபட்டு சொந்தங்ககிட்டயும் ஆளுவிட்டு விசாரிச்சாச்சாம்.. ஒருத்த‌னும் என்ன‌ க‌ட்டிக்க‌ச் ச‌ம்ம‌திக்க‌லையாம்.. சில‌ பேத்துக்கு என் ராசிமேல‌ ப‌ய‌ம், சில பேத்துக்கு நான் என் மாமாமேல வ‌ச்சிருக்கும் நேச‌த்தில‌ ப‌ய‌ம், சில‌ பேத்துக்கு அதுல ச‌ந்தேக‌ம், சில பேத்துக்கு என் மாமா மேல ப‌ய‌ம், சில‌ பேத்துக்கு ஜோடிக‌ளை பிரிப்பதுல‌ ந‌ம்ப‌ க‌த்தியா இருக்க‌வேணாமுங்கிற‌ ந‌ல்ல‌ அக்க‌றை..சொந்த‌க்கார‌வுக, தெரிஞ்ச‌வுக, தெரியாதவக‌கிட்ட எல்லாம் சொல்லி வெளியூருல‌ கிழ‌க்கு இல்ல‌னா தெக்குப் ப‌க்க‌ம் மாப்பிள்ளைப் பாக்க‌ச் சொல்லி சொல்லியாச்சாம்..

'கையிலயே ஊத்துக்குழி வெண்ணெய‌ வ‌ச்சுகிட்டு இப்ப‌டி கிறுக்குத்த‌ன‌மா ஊரு ஊரா தேடுற' என் அப்பாரை என்ன‌ன்னு நான் சொல்லுற‌து..

இன்னும் மாமா ப‌ரிட்சை முடிஞ்சு வ‌ர‌ ப‌தினேழு நாளிருக்கு..எப்ப‌டியாவ‌து நான் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு க‌ட‌த்திட்டேன்னா, அப்ப‌ற‌ம் எப்ப‌டியும் என் மாமா இந்த‌ சிக்க‌லிலேருந்து என்னை மீட்டுரும்.. மாட்டிக்க‌மாட்டேன்னு என‌க்குள்ள‌ எதோ ஒரு தைரிய‌ம் இருந்துச்சு..

பாக்கிய‌ம் ப‌ய அப்ப‌யும் சொன்னான்.. நாந்தேன் "வேண்டாம்பா.. மாமா பாவ‌ம், ஏற்க‌ன‌வே அதுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல.. நீ வேற‌ போயி அதுகிட்ட‌ இதெ‌ல்லாம் சொன்னீன்னா, அப்ப‌ற‌ம் ஒன்னு அதால‌ ச‌ரியா ப‌ரிட்சை எழுத‌ முடியாது இல்ல‌ அது ப‌ரிட்சையே எழுதாமா ஊருக்கு வ‌ந்துரும்.. அதோட‌ மூனு வ‌ருஷ‌ம் ப‌டிச்ச‌தெல்லாம் வீணாப் போயிடும்"னு சொன்னேன்..

ராசிங்கிற‌ பேருல ஊசிப்போன‌ இந்த‌ உளுந்த‌ வ‌டை உள்ளூரிலே விலை போகாத‌ போது, வெளியூரிலையா விலை போகப்போகுதுன்னு ஒரு மத மதப்புல இருந்துட்டேன்..

ஆனா என் கிர‌கம்.., அற‌ந்தாங்கிக்கு அங்கிட்டு இருக்கும் காதேரிப்ப‌ட்டியிலேருந்து ஒரு சனியன புடிச்சாந்துட்டாரு என்னை பெத்த‌ ம‌க‌ராச‌ன்.. எவ‌னோ சொன்னானாம், எவ‌னையோ போயி பாத்தாராம், இந்த‌ மாப்பிள்ளையை புடிச்சாராம்.. மாப்பிள்ளை லாரி டிரைவ‌ரா வேலை பாக்குறாராம், எப்ப‌டியும் ஒரு லோடுக்கு 50 - 100ரூபாய் சம்பாதிப்பாராம்.. கூட‌ப்பிற‌ந்த‌து ஒரு அக்காவும் ஒரு த‌ம்பியுமாம்.. எல்லாத்துக்குமே அங்க‌னைக்குள்ள்வே க‌ல்யாண‌மாயிடுச்சாம் .. இவ‌ருக்கும் என்னைப் போல‌வே ராசி ச‌ரியில்லாம போயிடுச்சாம்.. அதுதேன் எங்க‌ அப்பாவுக்கு ரொம்ப‌ புடிச்சுருந்துதாம்.. மாப்பிள்ளை வீடு பெண் பார்க்க‌ வ‌ந்தாச்சு.. அருவ‌ருப்பா போயி நின்னேன்... டீ, காபி எதுவும் நான் குடுக்க‌லை.. டிரைவ‌ர் மாப்பிள்ளைகிட்ட என்னைப் ப‌த்தி எல்லாமும் சொல்லிட்டாராம் என் அப்பாரு.. இப்ப‌டிப் ப‌ட்ட‌ பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குற‌துல, அவ‌ருக்குத்தேன் ஏக‌ப்ப‌ட்ட சந்தோஷ‌மும், புண்ணிய‌மும்னு சொன்னுச்சாம் அந்த காக்கா..

"என‌க்கு ஒரு கெட்ட‌து ந‌ட‌க்கனும்னா ம‌ட்டும் க‌ண்ண‌மூடி க‌ண்ணத் திற‌க்குற‌துக்குள்ள ந‌ட‌க்குது.. ஒரு ந‌ல்லது ந‌ட‌க்க‌ எம்புட்டு நாளு, எம்புட்டு வ‌ருஷ‌ம், எம்புட்டு யோச‌னை யோசிக்குது என் வாழ்க்கை".. என்ன‌டா இது விந்தைனு, எல்லாம் என‌க்கு ஏதோ சித்து விளையாட்டுமாதிரியே தெரிஞ்சுது.

'என் மாமாவோட‌ க‌டைசி ப‌ரிட்சைக்கும் முத ப‌ரிட்சை அன்னைக்குத்தேன் என் க‌ல்யாணத் தேதி'...

மாமாவுக்குத் தெரியாம விஷ‌ய‌த்தை ம‌றைச்சு மாமாவ‌ ஒழுங்கா பரிட்சை எழுத‌ வைக்க‌ அத்தை ட‌வுனுக்கு புற‌ப்ப‌ட்டுகிட்டு இருந்தாக‌..

ஊருக்குள்ள‌ உள்ள‌ எல்லா சின்ன‌துக்கும் விவ‌ர‌முள்ள, அனுப‌வ‌முள்ள‌ பெரிய‌வ‌ங்க‌கிட்டேருந்து அறிவுரை.. "யாரும் பொம்மி க‌ல்யாண‌த்துல‌ எந்த‌ வித‌ குழ‌ப்ப‌த்தையும் உண்டு ப‌ண்ணாதீங்க‌.. அவ அப்ப‌ன் மான‌ஸ்த‌ன்.. ரோச‌த்தோட‌ கொடுத்த‌ வாக்கை காப்பாத்த‌ ந‌டையா ந‌ட‌ந்து மாப்பிள்ளைய புடிச்சாந்துருக்கான்.. க‌ல்யாண‌ம் நின்னுச்சுன்னா அவ‌ன்பாவ‌ம் உங்களை சும்மாவிடாது.. அந்த‌ புள்ளைக்கு அங்க‌தேன் வாழ‌ணும்னு ஆண்ட‌வ‌ன் அது த‌லையில‌ எழுதி வ‌ச்சிருக்கான்.. அதனால‌தேன் ஜாத‌க‌மெல்லாம் ஒத்துபோயிருக்கு.. மூக்க‌ நுழைச்சு மூச்சுத் திணற வச்சுராதீங்க ஒரு குடும்ப‌த்தை, ப‌ய‌ புள்ளைகளா.."ன்னு..

நான் நேரா அய்ய‌னாரு கோயிலில‌ போயி கையில‌ சூட‌மேத்தி என் க‌ட‌மையை அவ‌னுக்கு செஞ்சு முடிச்சேன்..

செம்மிய‌ நிமிர்ந்து பார்க்க‌வும் என் ம‌ன‌சில‌ தெம்புஇல்ல‌..

அய்ய‌னாருகிட்டேருந்து க‌ரிச்சாந்தையும், ரோசு க‌ல‌ர் குங்கும‌த்தையும் எடுத்துகிட்டு நேரா மாமா வீட்டுக்குப் போனேன்..என்னை அத்தை விச‌ன‌மா பாத்தாக‌லா இல்ல‌ வித‌ண்ட‌வாத‌ம் வ‌ந்துருக்கேன்னு பாத்தாக‌லான்னு தெரிய‌ல‌..

'ப‌ய‌ப்ப‌டாதீங்க‌ அத்தை, இனிமே நானும் என் ராசியும் முழுங்குற‌துக்கு எதுவுமில்ல..என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வாராது.. எல்லாந்தேன் முடியப்போகுதே..மாமா ந‌ல்லாயிருக்கனும் அதுதேன் என‌க்கு வேணும், இது அய்ய‌னாரு கோயிலில மாமாவுக்காக‌ நான் செஞ்ச வேண்டுத‌ல் சாந்தும், குங்கும‌மும்.. இது சாமியிதுதேன், மாம‌னுக்கு பூசி விட‌ப்போற‌து நீங்க‌தேன்.. அத‌னால எந்த‌ சாமிக்குத்த‌மும் ந‌ட‌க்காது.. அப்ப‌டி எதாவ‌து ந‌ட‌க்கனும்னா அது இந்த‌ வாட்டியாவது என‌க்கே நடந்து தொலைக்க‌ட்டும்.. மாமாவ ந‌ல்ல‌ ப‌டியா பரிட்சை எழுத‌ சொல்லுங்க'ன்னு சொல்லி அத்தை கையில கொடுத்துட்டு, கிள‌ம்பி வீட்டுக்கு வ‌ந்தேன்.. வாசலில அம்மா என்னைப் பார்த்தாக‌.. 'இந்த‌ வாட்டி எந்த‌ ச‌ண்டையும் வாராது.. சாமிக்குத்த‌மும் வாராது'ன்னு சொல்லிட்டு உள்ள‌றைக்கு வ‌ந்தேன்..

என் மாம‌னோட‌ நினைவுக‌ளை ஓட‌விட்டேன்..

"உள்ளூருல‌ இருக்குற‌வுகல‌ நேருல‌ போயி ம‌ஞ்ச‌ள், குங்கும‌ம் வ‌ச்சு க‌ல்யாண‌த்துக்கு அழைக்க அம்மா குங்கும‌ச்சிமிழோட‌ போயாச்சு".. அய்ய‌னாரு கோயிலிலேருந்து மாமா வீட்டுக்கு வ‌ரும்போது பிச்சாந்த அர‌ளி விதை ம‌டியில க‌ன‌த்துச்சு.. மாமாவோட‌ நினைப்போட‌ ஒரு கோழையா.. அர‌ளி விதையை அம்மியில‌ அரைச்சேன்.. பூமிய விட்டு பிரியிற‌துக்கு முன்னாடி எல்லா சொந்த‌ ப‌ந்த‌த்தையும் பார்த்தாச்சு, உள்குத்த‌லா சொல்லியாச்சு..

ஆனா என்னோட‌ இந்த‌ பிற‌ப்புக்கும், வாழ்ந்த‌ வாழ்க்கைக்கும், ம‌ண்ணை விட்டு பிரிய‌ப்போற‌ இந்த உசிருக்கு அர்த்த‌ம் சொல்லும் என் ம‌ரிக்கொழுந்துகிட்ட, என் புருஷ‌ன்கிட்ட‌ சொல்ல‌லையே..ம்ஹும்.. சொல்லாம‌ப் போனாதேன் தேடி வ‌ர‌மாட்டாக‌.. என் வீர‌சிங்கு இந்த திராணிய‌த்த‌வ‌ள‌ நினைச்ச‌தை நினைச்சு என்னை வெறுத்தாச் ச‌ரி.. ம‌ரிக்கொழுந்துன்னு ம‌ன‌சில‌ நினைச்சு முத உருண்டைய‌ முழுங்கிட்டேன்.. க‌த‌வு த‌ட்டுற‌ ச‌த்த‌ம் கேட்டுச்சு.. அன்னைக்கு ஆத‌ர‌வுக்கு ஏங்கின‌போது வந்த‌ மாதிரி இன்னைக்கு எனக்கு இந்த‌ உசிருக்கு மோட்ச‌ம் குடுக்க‌ வ‌ந்திருச்சா என் மச்சான்னு என‌க்குள்ள ஒரு ஆவ‌ல்..

ஆசையா போனேன்.. ஆனா அம்மா ச‌த்த‌ந்தேன் கேட்டுது.. நெஞ்செல்லாம் அடைக்கிற‌ மாதிரி இருந்த‌து.. மரிக்கொழுந்து வாசத்தை நினைப்பெல்லாம் மோந்துகிட்டுருந்ததால முழுங்கும் போது தெரிய‌லை க‌ச‌ப்பு.. இப்ப‌தேன் தெரியிது க‌ச‌ப்பும் எரிச்ச‌லும்..

'எங்க‌ கிராம‌த்துல எந்த‌ வீட்டுக்க‌த‌வும் சாத்தியிருக்காது.. ராத்திரியிலதேன் சில‌ வீட்டுக்க‌த‌வுக‌ சாத்தியிருக்கும்.. வீட்டு பெரிய ஆம்ப‌ளைக‌ க‌ட்டிலுபோட்டு திண்ணையில‌ இல்லைனா வாரியில‌தேன் ப‌டுத்துருப்பாக .. அத‌னால‌ எப்ப‌வும் எங்க‌ வீட்டுக்க‌தவு சாத்தியிருக்காது..' ஆனா இன்னைக்கு சாத்தியிருக்க‌வும் எங்க‌ அம்மா சுதாரிச்சுகிட்டாங்க.. க‌த‌வை ப‌ல‌மா த‌ட்ட‌ ஆர‌ம்பிச்சிட்டாக‌.. வாயெல்லாம் துடைச்சுகிட்டு க‌த‌வை போயி திறந்தேன்.. நான் எதோ தப்பு ப‌ண்ணியிருக்கேன்னு என் அம்மா க‌ண்டுபிடிச்சிருச்சு.. அடி ஒன்னும் இடிதேன்.. ஆனா என‌க்குத்தேன் அதெல்லாம் உண‌ர உண‌ர்ச்சியில்லையே.. க‌ண்ணெல்லாம் சொருக‌ ஆர‌ம்பிச்சிருச்சு.. என் மேல‌ வந்த‌ வாடைய‌ வ‌ச்சே, அர‌ளி வித‌ன்னு அடையாள‌ம் க‌ண்டுகிட்டாக‌ என் அம்மா.. உப்பில‌ த‌ண்ணிய‌ க‌ல‌க்கி.. இல்ல இல்ல..(அம்மா.. நெஞ்செல்லாம் எரியுதே)..த‌ண்ணியில உப்ப‌ க‌ல‌க்கி என்னை வ‌லுக்க‌ட்டாய‌மா குடிக்க‌ வ‌ச்சாங்க‌.. நானும் என்னால‌ முடிஞ்ச‌ வ‌ரை நெஞ்செரிச்சலுலயும் குடுத்தத் த‌ண்ணிய‌த் துப்பினேன்..

பாப்பாத்திய‌ கூப்பிட்டாக‌ அம்மா.. ஓடி வ‌ந்தா அவ‌ளும்..

என் கிட‌ப்ப‌ பார்த்து வைத்தியாயி (எங்க ஊரு ம‌ருத்துவ‌ ஆயாவ‌ அப்ப‌டித்தேன் கூப்பிடுவோம்) கூப்பிட‌ப் போயிட்டா..ஒழுங்கா த‌ண்ணிய‌ குடிக்கிறியா இல்லை இருக்கிற விதையை நான் திங்க‌வான்னு என்னை மிர‌ட்டினாங்க‌ என் அம்மா.. க‌ண்ணு ரொம்ப‌ சொருகிடுச்சு.. எப்ப‌டி அந்த‌ த‌ண்ணியக் குடிச்சேன், வைத்தியாயி வ‌ந்து என்ன‌ வைத்திய‌ம் பாத்துச்சுன்னு எல்லாம் என‌க்கு நினைவில்ல‌..

நினைவு வ‌ந்த‌ப்ப‌ வாந்தியும் கூடவே சேர்ந்து வந்துது.. முழு நினைவு வ‌ந்து பொழ‌ச்ச‌வுடனேதேன் இருந்த‌து ஒப்பாரிக் க‌ச்சேரி..

'அடி பாதியில‌ போற‌வ‌ளே, பாடையில‌ போற‌வ‌ளே... நீ போயிட்டா எங்களுக்கு ஏது நாதி..அடி நாதியெத்து போற‌வ‌ளே, ந‌ட்ட‌ ந‌டுவுல‌ போற‌வுளே.. நீ போயி நாங்க எங்களையையே சுடுகாட்டுல‌ வ‌ச்சுக்குற‌துக்கு, பொறுத்து இருடி உன் அப்ப‌னும் வ‌ர‌ட்டும்.. எல்லோரும் போயி குழியில‌ இற‌ங்கிடுவோம்"னு எங்க‌ அம்மா முந்தானையில‌ சிந்த‌ ஆர‌ம்பிச்சுட்டாக..

"எங்க‌ளுக்கு என்ன‌ வேண்டுத‌லா, உன் மாமனுக்கு உன்னை க‌ட்டி வைக்காம‌ இருக்க.. உன் அத்தைதானேடி உன்னை வேண்டாங்கிறா... உன் ராசிதானேடி அவ‌ குடும்பத்தோட‌ ஒத்து வாழ விடமாட்டேங்குது, நீ போனா முருகேசு ம‌ட்டும் இருப்பானா.. அவ‌னுந்தானேடி செத்துபோவான்.. ஏன்டி இப்ப‌டி எல்லாத்தையும் குழியில‌ த‌ள்ள‌ அலையிற‌.. எவ‌னுக்கோ ஒருத்த‌னுக்கு க‌ழுத்த‌ நீட்டி வாழ்ந்துதேன் தொலைஞ்சா என்ன"ன்னு ருத்திர‌ தாண்ட‌வ‌ மந்திர‌ம்பாட‌ ஆர‌ம்பிச்சிருச்சு எங்க‌ அம்மா..

நான் எடுத்த‌ க‌டைசி முய‌ற்சியும் தோத்துப்போச்சு..

(ப‌டிக‌ள் இருக்கு உள்ளே நுழைய‌‌..)

-----------***----------

வாசற்படி - 8