Monday, November 12, 2007

வாசற்படி - 8

க‌ல்யாண‌ தேதியும் வந்திருச்சு.. அம்ம‌ன் கோயிலில‌ க‌ல்யாண‌ம்.. ஊரு ம‌ந்தையில ப‌ந்த‌ போட்டு சாப்பாடு.. தாய் மாம‌ன் வீட்டுக்கு அழைப்பில்ல‌.. க‌ட்டிக்கவேண்டிய‌ முறைமாம‌னுக்கும் சொல்லிவிட‌லை.. தாய் மாமனோட வீடே பூட்டியிருக்கு ஊருக்குள்ள‌.. பொண்ணுக்கு க‌ல்யாண‌ம்.. பொண்ணோட‌ நினைவெல்லாம் ம‌ரிக்கொழுந்து .. சுறுக்குக் கயித்தக் கட்டிட்டான் டிரைவரு..

பொண்ணிருந்தா..மரிக்கொழுந்து நினைப்புல.. 'உரியவளுக்கு ஒன்னுன்னா உத்தவனுக்கு அசிரிக்குமா, இல்ல ஆகாதது ஏதும் நடந்துருமா.?. அய்யோ என் மாமா..பாவமே.. அய்யனாரு கிட்டயும் உதவிகேக்க முடியாது.. அந்த ஆள நினைச்சாலே ஆத்திரந்தேன் வருது.. இப்படி எங்களை பிரிச்சு வச்சு அனாதையாக்கிட்டாரே..'..

மாப்பிள்ளை வீட்டு அழைப்போட முதராத்திரி மாப்பிள்ளை வீட்டுல..மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்காதவ, சித்தமில்லாம இருந்தவ, தலையில மரிக்கொழுந்தும் செவ்வந்தியும் சேர்ந்த கதம்பத்தை வச்சவுடனேதேன் தான் இருக்குற உலகத்துக்கே வந்தேன்..

தூக்குத்த‌ண்ட‌னை கைதியா நுழைஞ்சேன் முத‌ராத்திரி அறைக்குள்ள‌.. "எத்த‌னை த‌ட‌வை அவ‌னோட‌ ப‌டுத்துருக்க"ன்னு கேட்டான் டிரைவ‌ரு.. "போடா போக்க‌த்த‌வ‌னே.., உன‌க்கென்ன‌டா தெரியும் எங்க‌ உற‌வைப் ப‌த்தி"ன்னு.. எல்லாம் மாயையா போன‌வ‌ளுக்கு அவ‌னை ஒரு ஜ‌ட‌மாகூட‌ ம‌திக்க‌ என‌க்கு இஷ்ட‌முமில்ல‌, நான் ப‌திலும் சொல்லல‌..

என் த‌லையில‌ இருந்த‌ க‌த‌ம்ப‌த்தை பிக்க‌ கைய‌ வ‌ச்சான், எதோ சாக்க‌டைத் த‌ண்ணி ப‌ட்டாப்புல அருவ‌ருத்துத்த‌ள்ளிப் போனேன்.. ஆனா அந்த‌ குர‌ங்கு என் க‌த‌ம்ப‌த்தை பிச்சிருச்சு.. பிச்சுபோட்ட‌ க‌த‌ம்ப‌த்தை அந்தக் காட்டேரி பிடியிலேருந்து போராடி ம‌ரிக்கொழுந்தை தொட்டு எடுத்தேன்..

ச்சீ..ச்சீ..ன்னு அவன உதறி என்னையும், என் ம‌ரிக்கொழுந்தையும் காப்பாத்திக்க‌ துடிச்சேன்.. விடிஞ்சா அவ‌ன் என் பொழ‌ப்ப‌ 'ச்சீ'ன்னு ஆக்க‌த் துனிஞ்சிட்டான்.. போராடின‌தில‌ நானும் க‌ச‌ங்கியாச்சு, என் வலியெல்லாம் சுமந்து ம‌ரிக்கொழுந்தும் க‌ச‌ங்கியாச்சு..

த‌ய‌வுசெஞ்சு அந்த‌ க‌ழுதைப்ப‌‌ய‌ ச‌மாச்சார‌த்தை இதுக்கு மேல‌ நீங்க‌ளும் கேக்க‌ வேணாம், நானும் சொல்ல‌ வேணாம்.. உங்க மெலிசு இத‌ய‌த்தால‌ எல்லாம் அதை தாங்கிக்க‌ முடியாது.. ம்ஹும்.. இந்த காவாலிப்பய உலகத்துல ஒரு ஆம்பளைய விட, ஒரு பொண்ணுக்குத்தேன் வீரமும், விவேகமும் ரொம்ப அவசியம்.. எக்காரணத்தைக் கொண்டும் இத யாரும் மறந்தும்ராதீங்க, கைவிட்டும்ராதீங்க..
பொழுது விடிஞ்சிருச்சு.. ஆனா என‌க்குத்தேன் என்னைக்கு விடியும்னு தெரிய‌லை..
பொண்ணு வீட்டு விருந்துக்கு கூப்பிட‌ வ‌ந்திருக்காரு என் அப்பாரு..

'அடி, ஆத்தி.. இன்னைக்கு ராத்திரி எப்ப‌டியும் த‌ப்பிச்சிடலா'முன்னு த‌ப்பு க‌ண‌க்கு போட்டுட்டேன்.. கூப்பிட்ட‌வுட‌னே போனா ம‌ரியாதையில்ல‌, நாளைக்கு வாறோம்னு சொல்லிட்டான் இந்த‌ ப‌ர‌தேசிப்ப‌ய‌..

அய்யோ.., எப்ப‌டி த‌ப்பிப்பேன்னு.. ரொம்ப பயந்துகிடந்தேன்.. இதனால தானா எல்லாரும் ராத்திரின்னாலே பேயின்னு சொல்லி பயப்புடுறாக.?. என‌க்கு ராத்திரி வ‌ர, வ‌ர அந்தக் க‌ட்டையில‌ போற‌வ‌ன‌ அருவாம‌னையால‌ கொன்னு போட்டுட‌லாமான்னு ஆவேச‌மா இருந்துச்சு..

அந்த‌ குடிகார‌ப்ப‌ய‌ ராத்திரிபூரா வ‌ர‌லை .. அம்மா.. த‌ப்பிச்சிட்டேன்னு கண்ண சொருகிக்கிட்டேன்..

ஆனா விடிஞ்சிருச்சே.. என் ஊருக்குள்ள‌ எப்ப‌டி கால‌டி எடுத்துவைப்பேன்..என் உரிமைய‌னுக்கு இந்த உட‌ம்பு, ம‌ன‌சு ரெண்டையும் கொடுக்காம, வெளி சுகமேதும் கொடுக்காத இந்த வெத்து ம‌ன‌சை ம‌ட்டும் கொடுத்து, அசிங்க‌ப்ப‌ட்ட உட‌ம்போட‌ எப்ப‌டி என் மாம‌னைப் பார்ப்பேன்.?.

அட, ஆண்ட‌வா.. என் இத‌ய‌த்தை என்ன‌ இரும்புல‌யா செஞ்சு வைச்ச‌.. இம்புட்டு ரன‌ வேத‌னைக்கும் சாகாம‌ இன்னும் க‌டந்து துடிச்சிட்டுருக்கே.. ந‌ல்லாயிருக்குற‌வ‌க‌ளுக்கெல்லாம் வ‌ருதே இந்த‌ மார‌டைப்பு.. இந்த‌ நாதிய‌த்த‌வ‌ளுக்கு வ‌ர‌க்கூடாதா.. கண்ணுல இறுகிப்போனத் தண்ணி மாதிரி என் இதயத்துல பாயிர ரத்தமும் இறுகிப்போகக்கூடாதா.??. என்ன‌ பாவ‌ம் ப‌ண்ணினேன்னு என்ன‌ இப்ப‌டி வாட்டுற‌..

வ‌ந்திருச்சு ஊரு, இல்ல இல்ல நான் ச‌மாதியா ச‌ம‌ஞ்சுப்போக‌ப் போற‌ இட‌ம்..

புதுப்பொண்ணை பார்க்க வந்தாச்சு ஊருச‌ன‌ம்..என் க‌ண்ணு முன்னாடி செம்மிதேன் வ‌ந்துபோனுச்சு, ..ம்க்கும்.. இன்னும் என்ன‌ இருக்குன்னு இப்ப‌டி என் மாமா ஊருக்குள்ள வந்திட்ட‌தை எனக்குச் சொல்ல‌ வ‌ந்திருக்கு இந்த‌ச் செம்மி..

ந‌ம்ப‌ ஆளுதான் ச‌மைஞ்சு ப‌ல‌ வருஷ‌ம் ஆச்சே.. இது என்ன‌ புதுசா மாம‌னாரு வீட்டு முன்னாடி காய்ஞ்சுகிட்டு இருக்குற‌ வாழைப் பந்த‌ல்னு எங்க வீட்டைப் பாத்து மாமா கால‌ வைக்க‌, அத்தை கைப்பிடிச்சு இழுத்த‌தையும் உத‌றிட்டு வ‌ந்தாச்சு வீட்டு முன்னாடி..திண்ணையில‌ உக்காந்துருந்த‌ பெரிய ஆளுக‌ளும், வாரியில‌ சேரு போட்டு உக்காந்திருந்த‌ சொந்த‌ங்க‌ளும் எந்திருச்சு நின்னாச்சு..
"என்ன‌ மாமா.. வீட்டுல என்ன விஷேசம்"னு என் ம‌ரிக்கொழுந்து கேட்க‌, பெத்த‌வ‌க‌ளேருந்து எல்லா சொந்த‌ பந்த‌மும் ப‌தில் சொல்ல‌த் திண‌ற‌, "அட.. வா முருகேசு, ஏம்மா.. தங்கச்சி.?. உட‌ம்பு சுக‌மில்லாத‌ புள்ளைக்கு ந‌ல்ல‌து பொல்ல‌து ஆக்கிபோடாம‌.. வெயிலில‌ ஏன் அலைய‌ வைக்கிற‌.. வீட்டிக்கு கூட்டிட்டு போ.."ன்னு என் மாமன் கேள்விய‌ மாத்தினாரு ம‌ணிய‌க்கார‌ரு..

"நான் ந‌ல்லாதானுங்க‌ இருக்கேன், ந‌ல்ல‌த‌ என் வீட்டுல‌தேன் சாப்பிடணுமா, எங்க அத்தை வீட்டுல‌ சாப்பிட‌க்கூடாதா.. நீங்க‌ சொல்லுங்க‌ மாமா "வீட்டுல‌ என்ன‌ விஷேச‌ம்..எல்லாம் எப்ப‌டி இருக்கீங்க"ன்னு ப‌தில் கேள்வி கேட்க‌.. "வாடா வீட்டுக்குன்னு" அத்தை இழுக்க‌.. "இரும்மா.. இது ம‌ட்டும் வீடு இல்லாம‌ என்ன‌ காடா.. நீங்க‌ சொல்லுங்க‌ மாமா"ன்னு என் அப்பாரு முக‌த்தைப் பார்த்து கேட்க‌..ப‌தில் சொல்லத் தெரியாம‌ தேள் கொட்டின‌ திருட‌னாட்ட‌ம் முழிக்க‌, "அவ‌ரு பொண்ணுக்கு க‌ல்யாண‌ம‌ப்பா"ன்னு ம‌ணிய‌க்காரு ப‌தில் சொல்ல‌.. "க‌ட்டிக்கப்போர‌ என் கிட்ட‌ கேக்காம‌லே தேதிய‌ முடிவு ப‌ண்ணிட்டீங்க‌ளா மாமா"ன்னு கேட்க‌.. ப‌தில் சொல்ல ந‌ல்லொழுக்க‌மா வாழ்ந்த‌வுக எல்லாம் நாக்கு வ‌ற‌ண்டு நிக்க‌, "உங்க‌ளுக்கு ஒரு பொண்ணுதானே, அதைதேன் க‌ட்டிகிட்டு மாப்பிள்ளையா நான் நிக்கிறேனே, இன்னும் ஏதும் பொண்ணிருக்கா அந்த‌ ஆளுக்கு க‌ட்டிக் கொடுக்க"ன்னு ந‌க்க‌லா ப‌தில் சொன்னான் அந்த நா.. (ப‌டிச்ச‌வக..உங்க‌ முன்னாடி இப்ப‌டியெல்லாம் ஒரு ஆம்ப‌ளைய‌ வையுற‌து த‌ப்புத்தேன்.. ஆனா அசிங்க‌ப்ப‌ட்டுப் போன‌வ‌ளுக்குத்தேன் தெரியும் வ‌லி.. வையிற‌ வார்த்தைக‌ கேட்க‌ப் பிடிக்க‌லைனா காத‌ மூடிக்கோங்க‌..) நார‌ப்ப‌ய..

"யாரு பொண்ணை யாரு கட்டிக்கிற‌து.. யாருக்கு, யாரு மாப்பிள்ளை.."னு நல்லா உறைக்க‌ கேட்டுச்சு என் ம‌ரிக்கொழுந்து..

"என்னய்யா மாமா, விருந்துக்கு கூப்பிட்டு என்ன‌ அசிங்க‌ப்ப‌டுத்திறியா.. சொல்லியா அவ‌ன்கிட்ட .. முந்தா நாளுதேன் உன் பொண்ணு க‌ழுத்துல‌ நான் தாலி க‌ட்டினேன்னு" என் மாம‌ன் முன்னாடி விறைச்சு பேசிட்டான் அந்த‌ வீணாப்போன‌வ‌ன்..

ஏதோ சூது ந‌ட‌ந்துருக்குன்னு பெருசுக‌ முழிக்கிற‌ முழியில‌யும், புதுசா முளைச்ச‌ க‌ளை முண்டுவதுலையுமே புரிஞ்சுக்கிச்சு என் ம‌ச்சான்..

ம‌னசைத் த‌ள‌ற‌ விட‌லை என் ம‌ரிகொழுந்து ம‌க‌ராச‌ன்..

தாலி க‌ட்டின‌வ‌னுக்கெல்லாம் பொண்டாட்டியா வாழ‌ என் பொம்மி ஒன்னும் போக்க‌த்த‌வ‌ இல்ல‌ ..
[இந்த, இந்த‌ ஒரு சொல்லு போதுமே .. என் உசிர, நான் வாழுற வாழ்க்கையின் அர்த்த‌தை உரிய‌வ‌னால‌ ம‌ட்டுந்தானே புரிஞ்சுக்க முடிஞ்சுருக்கு.., என்னை பெத்தவளுக்கும் இது புரிய‌லை, என்னைச் சும‌ந்து வ‌ள‌த்த‌வ‌ருக்கும் புரியாம‌ப் போயிடுச்சே..]

எவ‌னாவ‌து அடுத்த‌வ‌ன் பொண்டாட்டிக்கு தாலிக‌ட்டி தான் பொண்டாட்டின்னு சொல்லுவானா.?..உன‌க்கிட்ட‌ என‌க்கென்ன பேச்சு.. என் பொம்மிய‌ அடுத்த‌வ‌னுக்கு க‌ட்டிக் கொடுக்க‌ நீங்க‌ யாரு மாமா..?.."ன்னு என் அப்பார‌ப் பார்த்து ஓங்கி அறையிர‌ மாதிரி, எல்லாத்துக்கும் உறைக்கிற‌ மாதிரி கேட்டுச்சு என் மாமா..

" ஏன்யா பொண்ணைப் ப‌த்தினியா வ‌ள‌த்தேன்னு சொன்ன.., அவ‌னோட‌ ப‌டுத்து எந்திரிச்ச‌வ‌ளைத்தேன் என‌க்கு க‌ட்டிவ‌ச்சியா"ன்னு ஊருச‌ன‌ம் அத்த‌னை முன்னாடியும் என் அப்பாரைப் பாத்து கேட்டுச்சு அந்த‌ ஊதாரி..நல்லா வேணும் என் அப்பாருக்கு.. பெத்த‌ பொண்ணு வாழ்க்கைய கூட நினைக்காம வெறும்ப‌ய‌ கௌர‌வ‌த்துக்குன்னு அவரு தேடியாந்த‌ தேவாங்குத்தேனே அது..

என்னை ஒருத்த‌ன் அசிங்க‌ப்ப‌டுத்திட்டான்ன‌வுட‌னே ஆத்திர‌ப்ப‌ட்டு அவ‌னை அடிக்க‌ப்போயிருச்சு.. 'என் ம‌ரிகொழுந்து அப்பு'.. ச‌ண்ட‌ முத்திருச்சு.. "சாப்பிடக் கூப்பிட்டு என் சங்கருக்க பார்க்குறீகளாடா..?.. உன் பொண்ணு எப்படியாயிருந்தாலும் என்னோடதானே வாழுந்தாகணுன்.. நல்லா வாழ வச்சர்றேன் வாங்கடா" ன்னு வெத்து வேட்டு வெடிச்சிட்டு போயிடுச்சு..

ம‌‌றுப‌டியும் பெரிய‌வுக எல்லாம் ம‌ணியாரு வீட்டுத் திண்ணையில‌ கூடியாச்சு..

"க‌ல்யாண‌மெல்லாம் முடிஞ்சிருச்சு, நீ இப்ப‌டி க‌ல‌க‌ம் ப‌ண்ணுற‌துல‌ நியாய‌மில்ல‌.. அந்த‌ பொம்மி வாழ்க்கையை அழிச்சிடாத‌ன்னு" புத்திகெட்ட பெருசு ஒன்னு என் மாம‌னுக்கு புத்தி சொன்னுச்சாம்..

"பொம்மி, உன‌க்கும் உன் குடும்ப‌த்துக்கும் பொருத்த‌மில்லேன்னுதேன் அவ‌ளை கௌவுருதையா அச‌லூருல‌ க‌ட்டிக்கொடுத்து உன் குடும்ப‌ம் இந்தூருல‌ வாழ‌ வ‌ழி ப‌ண்ணியிருக்காரு மாரிய‌ப்ப‌ருன்னு" செல்லா காசுபொறாததை நியாய‌முன்னு என் மாம‌னுக்கு விள‌க்குனாராம் வ‌ட‌க்கித்தெரு வாட்டாச்சியாரு..

எதுக்கும் ம‌சிய‌ல‌ என் மாமா.. "சின்ன வ‌ய‌சில‌ ஆசையை விதைக்கிற‌துக்கு முன்னாடியே இந்த‌ சாஸ்திர‌த்தையும், சாத‌க‌த்தையும் பார்க்க‌ வேண்டியதுதானே.?.. சொந்த‌ம் க‌ண்ட‌ வ‌ரையிலும் தெரியும் இந்த முருகேசுக்குத்தேன் அந்த‌ பொம்மின்னு.. அதுவுமில்லாம அவ‌ ம‌ன‌சில யாரு இருக்கான்னுத் தெரிஞ்சுக்காம, அவளுக்கு க‌ட்டாய‌க் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிவ‌ச்சு, அவ‌ வாழ்க்கையை சீர‌ழிக்க‌த்தேன் ஊருல‌ பெரிய‌ ம‌னுச‌னுங்க‌ன்னு ஆளாயி நிக்கிறீங்க‌ளா" ன்னு எல்லாம் வெக்கித் த‌லைகுனிய‌ கேட்டுச்சு..

"நாலு எழுத்து ப‌டிச்சிட்டோமுன்னு, வாயில வந்ததை பேசக்கூடாதுப்பா.. பெரிய‌வுக‌ எது செஞ்சாலும் உங்க‌ ந‌ல்ல‌துக்குத்தேன் செய்வோம்.."னு ஏதேதோ மாமாவுக்கு விள‌க்கினாங்க‌..

இர‌ண்டு நாளா ஊரே ம‌ணிய‌க்காரு வீட்டுல‌தேன் கூடியிருக்கு..

பாவ‌ம் ம‌ணிய‌க்காரு பொண்டாட்டியும், அவ‌ரு வீட்டு மாடும்.. காபி த‌ண்ணி போட்டுக்குடுத்தும், காபி ட‌ம்ள‌ருக‌ளை க‌ழுவியுமே அந்த‌ அம்மா இடுப்பு ஒடிஞ்சிருக்கும்..

என் பிடிவாத‌ப் புள்ளை கொஞ்ச‌மும் அச‌ர‌ல‌.. " ந‌ட‌ந்த‌து க‌ல்யாண‌மே இல்ல‌, அது செல்லுப‌டியாகாது"ன்னு முடிவா சொல்லிடுச்சு..

க‌டைசியில‌ என்னைக் கூட்டிவ‌ர‌ச்சொல்லி ஆளு வ‌ந்துருச்சு..வீட்டு வாச‌ப்ப‌டி இற‌ங்குறேன்.. வீதியில என்னைப் பெத்த தாயி, என் அத்தை, ட‌வுனு சின்ன‌ம்மா மூணுபேரும்..மூ.தே...முப்பெரும் தேவிக‌ளா வீதியில‌ நின்னுகிட்டு இருந்தாங்க‌.. "எந்த‌ சாதி ச‌ன‌த்துல‌யும் இல்லாத, அத்துகிட்டு வ‌ந்து வாழுற‌ வாழ்க்கைக்கு உன் மாம‌னோட சேர்ந்து நீயும் த‌லையாட்டிறாத‌.. ந‌ம்ப‌ குடும்ப‌ மான‌த்தையும், ந‌ம்ப‌ சாதியோட கௌவுருதையையும், ஊரோட‌ ப‌ம்பாட்டையும் (ப‌ண்பாட்டையும்) கெடுத்துறாத‌ன்னு" அர்த்த‌மில்லா அறிவுரை சொல்லி அனுப்பினாங்க‌..

என்னைய‌., நான் இருக்குற க‌திய‌ப் பாத்த‌வுட‌னே என் மாம‌ன் க‌ண்ணும், நெஞ்சும் துடிக்க‌ ஆர‌ம்பிச்சிருச்சு..

ஊருக்கார‌வுக‌, உற‌வுக்கார‌வுக‌ யாரும் இருக்காகன்னே நான் பார்க்க‌லை.. நேரா என் மாம‌னைப் பார்த்தேன், என‌க்கேத் தெரியாம உறைஞ்சுப்போன‌ என் க‌ண்ணீரு உருகி ஊத்த‌ ஆர‌ம்பிச்சிருச்சு.."எத்த‌னை ஜென்ம‌ம் எடுத்தாலும் என் நினைப்பில‌, ம‌ன‌சில‌, பிற‌ப்பில எல்லாத்துல‌யும் நீ ம‌ட்டுந்தேன் மாமா இருக்க‌ முடியும்.. ஆனா நான் இப்ப‌ அசிங்க‌மான‌வ., அந்த‌ நாதாரித் தீண்டின‌ எச்சி ப‌ண்ட‌ம் உன‌க்கு வேண்டாம்.."னு சொன்னேன்..

நம்ப ஜோடி இப்ப‌டி ந‌ம்ப‌ளை மாதிரி சுதாரிப்பு இல்லாம இருக்குதேன்னு என் மாமா வெறுத்துப்போக‌லை..

என் கைய‌ புடிச்சு உச‌த்தி எல்லாரு முன்னாடியும் சொன்னாக‌ "இப்பவாவ‌து புரிஞ்சுதா இவ‌ என் பொண்டாட்டி, எனக்குச் சேர வேண்டியவ"ன்னு.. அட‌ங்கேப்பா, எங்கேருந்துதேன் இந்த‌ ம‌னுச‌ப்ப‌ய‌னுக்கு என் மேல‌ இம்புட்டு அன்பும், அக்க‌றையும் வ‌ந்துச்சோ...இத‌விட‌வா எங்க‌ளுக்குள்ள‌ இருக்குற‌ ப‌ந்த‌ம் தெய்வ‌த்தோட க‌ருணையில‌ பிற‌ந்த‌துன்னு சொல்லி இந்த‌ பெரிய‌வ‌ங்க‌ளுக்கெல்லாம் புரிய‌ வைக்க‌னும்..

"நீ என் பொம்மிடி, நீ அசிங்க‌ம்னா, நானும் அசிங்க‌ந்தேன்.. அசிங்க‌த்துக்கு அசிங்க‌ம் ச‌ரியாப்போயிடும்னு" ப‌ச்ச‌ப்புள்ள‌க் க‌ண‌க்கா என்னைப் பார்த்து சொல்லிட்டு, " இது என் சொந்த‌ ஊரு, நீங்க‌ள்லாம் ஊரு பெரிய‌வுக‌ங்கிற‌துனால‌தேன் பொறுமையா பேசிறேன்.. உங்க‌ளோட‌ ந‌ல்ல‌ முடிவுக்காக‌ ஒரு நாளு காத்திருக்கேன்.. நீங்க‌ளே எங்க‌ளை சேர்த்து வைச்சா இந்த‌ ஊரில‌ வாழுறோம்.. இல்லைனா நாங்க‌ ட‌வுனுப‌க்க‌ம் போயிட‌றோம்.. ஊருஞ்ச‌ரி, உற‌வுஞ்ச‌ரி, குடும்ப‌முஞ்ச‌ரி முறைப்ப‌டி எப்ப‌டி முறைப்பாடு போட்டு எங்க‌ளை அத்து விட‌னுமோ அப்ப‌டி அத்துவிட்டுக்கோங்க"ன்னு அழ‌கா, ஆக்க‌மா சொன்னாக‌ என் ம‌துரைவீர‌ ம‌ரிக்கொழுந்து..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)
-----------***----------

வாசற்படி - 9

No comments: