Saturday, November 10, 2007

வாசற்படி - 9

என் மாம‌னோட‌ பேச்சுக்கும், செய‌லுக்கும் வெறும் வார்த்தையால‌ அணை போடுற‌து சாத்திய‌மில்ல‌ன்னு, என‌க்குத் தாலிக‌ட்டிய‌ த‌க‌ர‌ட‌ப்பாவை கூட்டி வ‌ர‌ச்சொல்லி ராத்திரியே தூதுவிட்டாக, ஊரு பெரிய‌வுக‌..

இவ்வ‌ளவு நாளு விழுந்ததெல்லாம் இடியே இல்ல‌, இனிமே இருக்கு பாருங்க‌ இந்த‌ ஊருக்கும், உல‌க‌த்துக்கும் ஒரு மாபெரிய இடி.. ம‌ர‌ண‌ இடியா..

ராத்திரி போன ஆளு எப்படித்தேன் அந்த‌ இடிய‌த் தாங்கிக்கிட்டு ஊருக்குள்ள வந்து சேர்ந்தாரோ.!!. அவரு நாக்கு அந்த‌ சேதிய‌ சொல்லுற‌துக்கு கூச‌ம‌ட்டுமில்ல‌, ப‌ய‌ப்புட‌வும் செஞ்சுச்சு..

நீங்க‌ ஒன்னும் ப‌யப்புடாதீங்க‌.. உங்க‌ளை மாதிரி நாலையும் அல‌சிப்பார்த்து ஆராய்ஞ்சு முடுவு எடுக்குற‌வ‌ங்க எதுக்கும் கலங்கக் கூடாது..ஆண்ட‌வ‌ன் என்னைக்கும் ரொம்ப உங்களோட இருப்பான்..

இது சாமியையும், சாஸ்திர‌த்தையும் ச‌ரியா புரிஞ்சுக்காம, அர‌ண்ட‌வ‌ன் க‌ண்ணுக்கு இருண்ட‌தெல்லாம் பேயா தெரியிதுன்னு விள‌ங்கிக்காம‌, தாங்க‌ளெல்லாம் முக்காலும் உண‌ர்ந்த‌ ஞானிங்க‌ங்கிற ம‌த‌ப்புல த‌ப்பா சாமியையும், சாஸ்திர‌த்தையும் புரிஞ்சுகிட்டு மூட‌முட்டாள் த‌ன‌மா முடிவெடுக்குற‌வ‌ங்களுக்காக உண்மையை விள‌க்க‌ ஆண்ட‌வ‌ன் வ‌ச்ச‌ பெரிய‌ வெடிதேன், இந்த‌ இடி..

இடியும், வெடியும் இடிச்சு, வெடிச்சு எங்களை அதிர வச்சது.. உங்கள‌ அதிர வைக்கப் போறது வேட்டுச்ச‌த்த‌மா, இல்ல‌ இடிச்ச‌த்தமான்னு நீங்க‌ளே பாருங்க‌..

..ம் .. தூது போன‌ ஆளு கொண்டு வ‌ந்த‌ சேதி என்ன‌த் தெரியுமா??

என்னை அசிங்க‌ப்ப‌டுத்துன‌ அந்த‌ அவு..(ம‌ன்னிச்சிடுங்க‌.. இது என் ம‌ன‌க்குமுற‌ல் வார்த்தை.. உங்க‌ளுக்கு கேட்க‌ காது கூசுனுச்சுன்னா.. இந்த‌ வார்த்தைக்கு ம‌ட்டும் கொஞ்ச‌ம் காத‌ மூடிக்கோங்க‌..).. அந்த‌ அவுசாரிப்ப‌ய‌லுக்கு 'எய்ட்ஸ்'ஆம்..

வ‌‌ரைமுறையில்லாம ரோடு போன‌ இட‌த்திலெல்லாம் ப‌ல பொம்ப‌ளைக‌ளோட‌ ப‌டுத்த ஒரு ஈன‌ப்ப‌ய‌லுக்கு இந்த‌ வியாதிதானே வ‌ரும்...ஊருக்குள்ள‌ த‌லைகாட்ட‌ முடியாம ஓடிப்போயிடுச்சாம் அந்த‌ நாயி..

என்ன‌ அப்ப‌டியே நின்னுட்டீங்க‌.. இன்னும் மேல‌ இருக்கு .. ஆசுவாச‌ப்ப‌டாம கேளுங்க‌...

அவ‌னுக்கு வ‌ந்த‌து சரி, உன் வாழ்க்கையை ஏன்டி இப்ப‌டி ப‌ட்டுப்போக‌ணும்னு என‌க்காக‌ த‌ய‌வுசெஞ்சு விச‌ன‌ப்ப‌டாதீங்க‌..

எவ‌னோட‌யும் வாழ‌ முடியும்னு வாழ வ‌ழிவ‌கை செய்ய‌லாமா.??. வாழ்க்கையில‌ நிதானமா, பொறுத்து ஆராய்ஞ்சு பொருத்த‌மாதானே முடிவெடுக்கணும்.??. இந்த‌ கால‌த்து சின்ன‌ஞ்சிறுசுக ம‌ன‌சும், ம‌தியும் விசால‌மான‌து, ஆழ‌மான‌து.. அதை தான் தோன்றித்த‌ன‌மா எரிக்க‌ நினைக்க‌லாமா.?. இதெல்லாம் இந்த‌ வ‌ய‌சில‌ கூட‌ எங்க‌ ஊரு பெரிய‌வுக‌ புரிஞ்சுக்க‌லைனா வேற‌ எந்த‌ வ‌ய‌சில‌ புரிஞ்சுக்குவாக‌..

அதுச‌ரி அந்த‌ ம‌திம‌ங்கிப்போன ம‌னுச‌ங்க‌ளுக்காக நீ ஏன்டி ம‌க்கிப் போகணும்னு எனக்காக பதறுரீங்களா...

இந்த‌ ம‌க்கிப் போக‌ப் போற‌ ம‌ரிக்கொழுந்து ம‌ச‌க்கைக்காரி (ம்..அதுக்குத்தேன் எனக்கு கொடுப்பினை இல்லையே..), ம‌ச்ச‌க்காரிக்காக‌த்தானே விடிய‌ விடிய‌ வெறும் காப்பித்த‌ண்ணிய‌ குடிச்சுபுட்டு வெட்டி வியாக்யான‌மெல்லாம் பேசுனாங்க‌..

இன்னைக்கு இந்த ஊருல நானும்,எங்க‌ குடும்ப‌ங்க‌ளும், சொந்த‌ ப‌ந்த‌மும் இருக்குதுன்னா அது அவுக‌ ஆத‌ர‌வுல‌யும், அடிச்சிகிட்டு போனாலும் அக்க‌றையா வ‌ந்து சேருற‌ அன்பினால‌யும்தானே..

அடி பாத‌க‌ச்சி.., அப்ப‌ ம‌ரிக்கொழுந்து நிலைமை என்ன‌ன்னு கேக்க‌ வ‌ர்றீக‌ளா..

ம்.. நீங்க‌தேன் பாத்தீங்க‌ளே, என் மரிக்கொழுந்தைப்ப‌த்தி.. பாலப் போல மனசு, நல்ல தெளிஞ்ச‌ சிந்த‌னை, ப‌ல‌ சிக்க‌லையும் சிக்கில்லாம தீர்த்து முடிவெடுக்குற சிங்க‌ம்.. உறுதியான‌ அன்பு, உன்ன‌த‌மான நேச‌ம்.. இப்ப‌டிப்ப‌ட்ட என் மாம‌னுக்கு ஏத்த‌வ‌ளா நானு.?. கோழைச்சிறுக்கி.. என்னால‌ என் மாம‌னுக்கு என்ன‌த்த‌ கொடுக்க‌ முடியும்.. மாமா எனக்காக போராடின‌தில, க‌டுக‌ள‌வாவ‌து நான் போராடினேனா.?. என‌க்கு புருஷ‌ன் என் மாம‌ன்தான்னு தெரிஞ்சும் இன்னொருத்த‌வ‌னுக்கு க‌ழுத்த‌ நீட்டின‌து ம‌ன்னிக்குற‌ மாதிரியான‌ த‌ப்பா.?. ச‌ரி க‌ழுத்த‌தேன் நீட்டினேன்.. உரிய‌வ‌ன் தொட‌ வேண்டிய உட‌ம்புமேல அடுத்தவன் கைப‌ட்ட‌ப்ப‌வே அவ‌னை வெட்டி பொழி போடாமா, அந்த க‌ச‌டுகிட்ட போயி தோத்தேனே என‌க்கு எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ண்ட‌னை கொடுக்கணும்..அதேன் ஆண்ட‌வ‌ன் கொடுத்திட்டான்.. எப்ப‌டியாவ‌து என் மாம‌னை ந‌ல்ல‌ப‌டியா நான் வாழ‌வைக்க‌னும் ..

ஆனா .. என‌க்கு என்னைத் தொட்டுபாக்க‌வே ப‌ய‌மாயிருந்துச்சு.. இனிமே என்னைப் பெத்த‌வ‌கூட‌ என்னைத் தொட‌ மாட்டாங்க‌ளோ.!!. செத்தா என்னை யாரு தூக்கிப்போடுவா.??. க‌ழுகாவ‌து என் உட‌ம்பைத் தீண்டித் தின்னுமா.??.

எச்சில் முழுங்க‌க்கூட‌ என‌க்குள்ள‌ திராணியில்ல‌மா பித்துக்குழியா இருந்தேன்.. சேதி தெரிஞ்ச‌வுட‌னே, மாமா ஓடி வ‌ந்திருச்சு.. உங்க‌கிட்ட‌ சொன்ன‌ எல்லாத்தையும் சொல்லி, என்னைத் தொடாத‌ மாமா போயிடுன்னு க‌தறுனேன்.. மாமாவோட பிடிவாதந்தேன் உங்க‌ளுக்கும் தெரியுமே.. "என் பொண்டாட்டி, என் பொம்மி வாழ்க்கை சீர‌ழியிற‌து கூட‌ தெரிஞ்சுக்காம இருந்த‌ என‌க்கு த‌ண்ட‌னைய‌க் குடுக்க‌த்தேன் ஆண்டவன் என் உசிரான‌ உன‌க்கு குடுத்து என்னை க‌ஷ்ட‌ப் ப‌டுத்தி பார்க்குறான்.. புருஷ‌ல‌ட்ச‌ண‌ம் இல்லாம இருந்த என்னை த‌ண்டிக்க உன்னைக் காய‌ப்ப‌டுத்திட்டான் ஆண்ட‌வ‌ன்.. இதுக்குமேல‌யும் நான் இப்ப‌டியே இருந்தா ந‌ம்ப‌ வாழ்க்கையே சீர‌ழிஞ்சிடும்.. கிள‌ம்பு ட‌வுனுக்கு போக‌லாம்.. கெட்டதுலயும் ஒரு நல்லது இனி எந்த பயலும் பண்பாடு, கிண்பாடுன்னு சொல்லி நம்பளை தடுக்க மாட்டானுக"ன்னு சொல்லி என்ன கிளம்பச்சொல்லி பாடாபடுத்திட்டாங்க..

..ட‌வுனுக்கு புற‌ப்ப‌ட்டோம்.. எங்க‌ளை யாரும் எதிர்க்க‌லை.. எந்த சோகமுனாலும் ஒப்பாரி வச்சு, மூக்கச் சிந்தி தீர்த்துக்குற ஊரு, ஊமையா கிடந்துச்சு.. எல்லாருக்கும் யாரை, என்ன குத்தம் சொல்லிக்கிறதுன்னே தெரியலை..

அத்தை வந்தாக‌.. "என்னை ம‌ன்னிச்சிடுடி என் ம‌ரும‌க‌ளே.. இந்த‌ க‌ரு நாக்குக்காரி உன்னை தூத்தின‌துதேன் உன்னை இப்ப‌டியாக்கிருச்சு போல"ன்னு என‌க்காக‌ க‌ண்ணீரு வ‌டிச்சாக‌.. அத்தையா இதுன்னு என‌க்கு ஆச்ச‌ர்ய‌மா இருந்த‌து.. "எல்லாம் மாமாவோட‌ பிடிவாத‌ பேச்சு செஞ்ச‌ வேலையோ என்ன‌வோ.!."

ட‌வுனுக்கு புறப்படுறதுக்கு முன்னாடி எல்லாம் ஒன்னா குடும்ப‌த்தோட‌ அத்தையோட‌ விருப்ப‌ப்ப‌டி வீர‌மாகாளி அம்ம‌ன் கோயிலுக்கு போயி எல்லாத்தையும் ந‌ல்ல‌ப‌டியா வாழ‌ வைக்கணும்னு எல்லாரும் வேண்டிக்கிட்டாக..

என் கழுத்தில இருந்த சுறுக்குகயிற கழட்டி கோயில் குளத்தில போட்டாச்சு.. அம்மன்கிட்ட வச்சு என் மாமன் வம்சா வழி சிவன் தாலிய என் கழுத்தில கட்டினுச்சு என் மரிகொழுந்து.. கங்கையில முக்கி எழுந்தா போகுமாமே.., அது மாதிரி என் தீட்டும் என்னை விட்டு போறமாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு... எல்லாத்துகிட்டயும் ஆசிர்வாதம் வாங்கியாச்சு..

ட‌வுனுக்கு போற‌ ப‌ஸ்ஸில வ‌ந்து உக்காந்தாச்சு நானும், என் மாம‌னும்.. விடிஞ்சா பஸ்ஸு டவுனுக்கு போயிடும்..

எப்ப‌டியாவ‌து மாமா தூங்கின‌துக்க‌ப்புற‌ம் ப‌ஸ்ஸை விட்டு இற‌ங்கி எங்கெயாவ‌து க‌ண்காணாத‌ இட‌த்துக்குப் போயிடணும்னு முடிவு ப‌ண்ணினேன்.. என‌க்கு ம‌னுசாலுங்க‌ முக‌த்தைப் பார்க்க‌வே பிடிக்க‌ல‌.. அதுவுமில்லாம‌ என் மரிக்கொழுந்து ந‌ல்ல‌ப‌டியா வாழனும்.. நான் மாமாவோட‌ இருந்தா ட‌வுனுக்கார‌வுக‌ எல்லாம் மாமாவ‌ ஒதுக்கி வ‌ச்சிடுவாங்க‌ளே.!!. ஆனா என் அக்கறையான அழகுராசா என்னைப் ப‌த்தி ச‌ரியா புரிஞ்சுவ‌ச்சிருக்கு.. விவ‌ர‌மா என்னை ச‌ன்ன‌லோர சீட்டில உக்கார‌வ‌ச்சிட்டு மாமாவை மீறி நான் போகாத‌ப‌டி என‌க்குப் ப‌க்க‌த்து சீட்டுல மாமா உக்காந்திட்டாக‌.. ந‌டுராத்திரியிருக்கும்.. ச‌த்த‌மில்லாம‌ அழுதுகிட்டிருந்தேன்.. பிள்ளை வாய்விட்டு அழுதாதேன் பெத்தவளுக்கே புரியும், ஆனா என் மரிக்கொழுந்துக்கு எப்படிதேன் தெரிஞ்சுதோ.. என்னை இழுத்து ம‌டியில‌ ப‌டுக்கவ‌ச்சு தூங்க‌வ‌ச்சிருச்சுட்டாக..

டவுனுக்கு வந்தாச்சு..மாமாவோட‌ பிர‌ண்டோட‌ மாடிவீட்டு ஒன்டிரூமுல‌ குடியேறிட்டோம்.. மாமா என்னைத் தொடும்போத‌ல்லாம்.. மாமாவுக்கும் எங்க என் நோயி ஒட்டிக்குமோன்னு நினைச்சு த‌விச்சேன்..

வேலைதேட‌ப் போற‌துக்கு முன்னாடி "த‌ய‌வுசெஞ்சு உன் கோக்குமாத்து கேன‌ப்புத்திய கைவிட்டுரு.. நீ இல்லாம‌ என்னால‌ வாழ‌ முடியாதுன்னு" என்னை எச்ச‌ரிக்கை ப‌ண்ணிட்டுத்தேன் போவாக‌.. அப்படியே செல்லமா பின்னாடி ஒரு அடியும் போட்டுட்டுத்தேன் போவாக.. (பின்னாடின்னா என்னான்னு நீங்களே புரிஞ்சுக்கனும் .. அதெல்லாம் விளக்கக்கிட்டு இருக்க முடியாது..) மாமாவுக்கு ஒரு ந‌ல்ல‌ க‌ம்பெனியில‌ வேலை கிடைச்சு, அப்ப‌ற‌ம் அங்கிட்டு ஒரு மூனு மாச‌த்திலே மாமாவோட வேலைய‌ப் பார்த்து ச‌ம்ப‌ள‌ம் உய‌ர்வெல்லாம் செஞ்சாங்க‌..

சில‌ ஞாயித்துக்கிழ‌மை என்னை விழிப்புண‌ர்வு ம‌ற்றும் ஆத‌ர‌வு முகாமுக்கெல்லாம் கூட்டிட்டு போயி என் ப‌ய‌த்தை போக்கி என்னை தெளிவுப‌டுத்தினாக, மாமா.. என்னால அதுக்கு (இல்ல இல்ல புருஷனைப் போயி அது, இதுன்னு சொல்லுறேனே, புத்திகெட்டவ..) அவுகளுக்கு எந்த அளவும் பாதிப்பில்ல.. நான் எப்படி எப்படிலாம் நட ந்துக்கனும்னு எல்லாம் விலாவாரியா பெரிய பெரிய டாக்டரம்மா மூலியமா விளக்க வச்சாக.. அதுக்கு கூட இங்கீலீசுல நல்ல பேராச்சே..ம்.. ஆ..ம்.. கவுன்சிலிங்கு...

ம்..ட‌வுனுக்கு வ‌ந்த‌ புதுசுல என் மாம‌ன் ம‌ன‌சை எப்ப‌டியாவ‌து மாத்தி அதுக்கு வேற‌ வாழ்க்கை அமைச்சிகுடுக்க‌ துடிச்சேன்.. அப்ப‌தேன் தெரிஞ்ச‌து என் மாம‌ன் சித்த‌மெல்லாம் நாந்தேன்.., அது சீவ‌ப்பிற‌ப்பே என‌க்குத்தேன்னு..

இதெல்லாம் உங்க‌ளுக்கு வார்த்தையில‌ சொன்னா புரியாது..ஏன்னா .. உங்க‌ளுக்கு எங்க‌ வாழ்க்கை விள‌க்க‌த்தை புரிஞ்சிக்கிற‌ அள‌வுக்கு ப‌க்குவ‌மிருக்கோ என்ன‌வோ.. அதேன் அப்ப‌டி சொன்னேன்..

ம்ம்..ச‌ரி நாங்க‌ முத, முத‌ த‌னியா இருந்த‌ அந்த‌ ராத்திரி என்ன‌ ந‌ட‌ந்துதுன்னு.. இந்த இத்துனியோண்டு, ந‌கக் க‌னுக்க‌ள‌வு சொல்லுறேன்.. கேளுங்க‌ளேன்..

மாம‌னை விட்டு நான் ரொம்ப‌ விலகி, ஒடிங்கி உக்காந்துருந்தேன்.. மாமாவும் ரொம்ப‌ நேர‌ம் பொறுத்து பாத்தாங்க‌, நான் அச‌ருர‌தா இல்ல‌.. என்னை வெடுக்குன்னு புடிச்சி இழுத்து, தன் ம‌டியில‌ சாச்சி,என் நெத்தியில‌ முட்டிச் சொன்னாக‌, "இங்க‌ பாருடி ரொம்ப ப‌ண்ணின, அப்ப‌ற‌ம் எது ந‌ட‌ந்தாலுஞ்ச‌ரின்னு எல்லைய‌ மீறிடுவேன், பாருடிச் செல்லம்.. நீ ஒன்ன‌ ம‌ட்டும் உருப்ப‌டியா புரிஞ்சுக்க‌ணும்னு என் க‌ன்ன‌த்துல‌ த‌ட்டி, த‌ட்டிச் சொன்னாக "உன‌க்கும் என‌க்கும் க‌ல்யாண‌மாயிடுச்சே த‌விர, ந‌ம்ப‌ ரெண்டு பேரும் க‌ண‌வ‌ன், ம‌னைவி இல்ல‌.." நான் விதுக்கு விதுக்குன்னு முழிச்சேன்.. " நீயும், நானும் காதல் ஜோடிங்க..", எப்ப‌டி ஒரு காத‌லி த‌ன் காத‌ல‌னை க‌ல்யாண‌த்துக்கு முன்னாடி எல்லைமீறாம பாத்துக்குறாளோ.. அது மாதிரி நீயும் என்னை பாத்துக்கோ.. அவ்வ‌ள‌வுதான் .. அவ‌ன‌வ‌ன் க‌ல்யாண‌த்துக்க‌ப்புற‌ம் காத‌லி கிடைக்க‌ மாட்டேங்கிறா, காதல் இருக்க‌ மாட்டேங்குதேன்னு புல‌ம்புறானுங்க‌.. நீ ஏன்டி இப்ப‌டி என்னை வ‌தைக்கிற‌"ன்னு என் க‌ன்ன‌த்த‌க் கிள்ளிச் சொன்னாக‌..

நீங்க‌ ப‌ய‌ப்புடுற‌ மாதிரியோ, ச‌ங்க‌ட‌ப்ப‌டுற‌ மாதிரியோ எல்லாம் என் வாழ்க்கையில்ல‌..

ரொம்ப‌வே ந‌ல்லாயிருக்கேன்.. உங்க‌ வாழ்க்கையில‌ இருக்குற‌ எல்லா சுவையும் என்.. இல்ல, இல்ல‌ எங்க‌ வாழ்க்கையில‌ இருக்கு. ஊட‌ல், கிண்ட‌ல், நையாண்டி, ச‌ண்டை, ச‌மாதான‌ம், ப‌ர‌ஸ்ப‌ர‌ம், கார‌சார‌ விவாத‌ம், ப‌ட‌ம், பாட்டு, கொண்டாட்ட‌ம், சில்மிஷம், விளையாட்டு, வேடிக்கையான‌ பேச்சு, காதல், பெத்த‌வ‌ங்க‌ ஆத‌ர‌வு, அன்பு எல்லாம் இருக்கு.. ஒன்ன‌த்த‌விர.. அது என்ன‌ன்னு உங்க‌ளுக்கேத் தெரியும்.. அதைப் ப‌த்தி ந‌ம்ப‌ ரொம்ப பேச‌ வேண்டாம்.. ஏன்னா நீங்க‌ள்லாம் ரொம்ப‌ ப‌டிச்ச‌வ‌ங்க‌.. ஒரு ஆணால‌யும், பொண்ணால‌யும் அது இல்லாம‌ இருக்க‌ முடியுமா!?.. அப்ப‌டி, இப்ப‌டின்னு க‌ண்ட‌ப‌டிக்கு யோசிப்பீங்க ..யோசிச்சு அதுல ந‌ல்ல‌தை ம‌ட்டும் க‌ண‌க்குல‌ எடுத்தீங்க‌ன்னா பரவாயில்லை.. நீங்க‌பாட்டுக்கு க‌ண்ட‌தையும் க‌ண‌க்குல‌ எடுத்துக்க‌க்கூடாது இல்லையா.. அதேன் நான் ரொம்ப‌ உங்க‌கிட்ட‌ அது ப‌த்தி பேச‌லை..

ம்..சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேனே.. நான் இப்ப‌ கொஞ்ச‌ம் இங்கிலீஸெல்லாம் பேசுவேன்.. பாட்டு கிளாஸுக்கு கூட‌ப் போறேன்.. "குறையொன்றுமில்லைக் க‌ண்ணா"..பாட்டும், "காண‌க் காண‌ காத‌ல் பெறுகுதடி"ங்கிற முருக‌ன் பாட்டும நான் பாடினா .. (கொஞ்ச‌ம் கிட்ட‌ வாங்க‌.. தூங்குற‌வ‌க முழிச்சிகிட்டாலும் முழிச்சிக்குவாக‌...) என் ம‌ரிக்கொழுந்து ம‌ச்சானுக்கு ரொம்ப‌ பிடிக்கும்..

ம‌ரிக்கொழுந்துன்னு இப்ப‌ல்லாம் அடிக்க‌டி கூப்பிடுற‌தில்ல.. குழ‌ந்தை வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌மும் அப்ப‌டியே கூப்பிடமுடியுமா.?. அதும‌ட்டுமில்ல.. " நான் அவ‌ரை அப்ப‌டி செல்ல‌மா கூப்பிடுற‌தை பார‌தி (எங்க‌ குழ‌ந்தை பேரு) க‌ண்டுகிட்டு அவ‌ரு ப்ரெண்டுக‌ முன்னாடி அவ‌ரை "ம‌ரிக்கொழுந்து"ன்னு கூப்பிட்டுட்டா.. அதான் நான் கூப்பிடுற‌தை கொஞ்ச‌ம் குறைச்சிகிட்டேன்..

பார‌தி.., ஆத‌ர‌வு மைய‌த்திலேருந்து நாங்க த‌த்து எடுத்துகிட்ட‌ குழ‌ந்தை.. என்னை மாதிரியே அரியாம‌ பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌.. வ‌ர டிச‌ம்ப‌ர் 25 வ‌ந்துச்சுன்னா அவ‌ளுக்கு 5 வ‌ய‌சு ஆர‌ம்பிக்குது.. அவ‌ அப்பாருமேல என்ன‌ ஒய்யார‌மா கால‌ போட்டுகிட்டு தூங்குறா பாத்தீக‌ளா..

ஆழ் ம‌ன‌சில‌ என்ன‌ப்ப‌த்தி சின்னதா உங்க‌ளுக்கு வ‌ருத்த‌மிருந்தாலும், உங்களைச் சுத்தி வீசிகிட்டிருக்குற ம‌ரிக்கொழுந்து வாச‌ம் உங்க‌ளுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்..

ஒரு சின்ன‌ வேண்டுகோள்.. எங்கெயாவ‌து ம‌ரிக்கொழுந்து பூவைப் பாத்தீங்க‌ன்னா, என் ம‌ச்சானைப் ப‌த்தி ம‌ட்டும் நினைக்காதீங்க, இந்த‌ பொம்மிய‌ப் ப‌த்தியும், எங்க‌ குடும்ப‌த்த‌ ப‌த்தியும் சேர்த்து நினைச்சுக்கோங்க‌..

எப்ப‌வும் சிரிச்சுகிட்டே, ஆன‌ந்த‌மா இருங்க‌..

என்ன அப்ப‌டி பார்க்குறீங்க‌.. நீங்க எப்ப‌வோ எங்க‌ வீட்டுக்குள்ள வ‌ந்தாச்சு.. இன்னும் வாச‌ப்ப‌டி கேட்டா.., நான் எங்க‌ப் போக‌..?.. இனி வீட்டை இடிச்சு க‌ட்டினாதேன் உண்டு...

:)

ந‌ல்ல‌து, ச‌ந்தோஷ‌மா போயிட்டு வாங்க…

************************************

ஆசிரிய‌ர் குறிப்பு:

2 comments:

ராஜா முஹம்மது said...

வாழ்க்கையில் இப்படிப்பட்ட நல்லவர்கள் (மரிக்கொழுந்து) இன்னும் இருப்பதால் தான் "அன்பு" என்ற வார்த்தை இன்னும் உயிருடன் இருக்கு.

நல்ல இருந்தது.

இறைவன் கொடுத்த வழிகளில்
தவறான பாதைகள் மட்டுமே - சில
நாய்களின் கண்களில் படும்.

சோ.மஹாலெட்சுமி said...

ராஜா முஹம்மது அவர்களுக்கு,

//(மரிக்கொழுந்து) இன்னும் இருப்பதால் தான் "அன்பு" என்ற வார்த்தை இன்னும் உயிருடன் இருக்கு//

தங்களின் கூற்று, முற்றிலும் உண்மை.

நன்றி.